இன மற்றும் மத ரீதியான அமைதியின்மையை தடுப்பதற்கு ஒரு வழியாக பேச்சு சுதந்திர சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 44ஆவது மாநாடு கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இன மற்றும் மத ரீதியான குழப்பங்களை கட்டுப்படுத்த சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் காணப்படும் சட்டங்களை ஒத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற அமைதியற்ற நிலையை சுட்டிக்காட்டிய பிரதமர், அதன் அடிப்படையிலேயே இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டார்.
பேச்சு சுதந்திர சட்டமானது பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துமென சிலர் நினைக்கலாம். ஆனால், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சுக்களையே இச்சட்டம் கட்டுப்படுத்துமென்றும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, சமூக வலைத்தளங்களில் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயங்கள் தொடர்பாக சகல மதத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.