குறிப்பிட்ட சில உணவுப்பொருட்களுக்கான மத்திய வங்கியின் கட்டுப்பாடு நாட்டில் உணவு தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும் அபாயம் இருக்கின்றது. அதனால் மத்திய வங்கியின் தட்டுப்பாடு தொடர்பாக கவனம் செலுத்தி அதனை தளர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைலர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியினால் ஒருசில இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறித்த சிலவகை இறக்குமதிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து வியாபாரிகள் சிலர் எனது கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றார்கள்.
தற்போது நாம் முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இறுக்கமான நாணயக்கொள்கை அவசியமாகும். இருப்பினும் திறந்த கணக்கு, பெற்றுக்கொண்டமைக்கான பத்திரம், கட்டணம் செலுத்தியமைக்கான பத்திரம் போன்றவற்றின் மீதான கட்டுப்பாடுகள் எதிர்வரும் சில நாட்களில் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டைத் தோற்றுவிக்கும்.
எனவே மேலே குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், அத்தியாவசியப்பொருளாகக் கருதப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பான தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை அனுமதிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தும்படி மத்திய வங்கியிடம் கேட்டுக்கொள்ளுமாறும் உங்களை வலியுறுத்துகின்றேன். இது மிகக்குறுகிய காலத்தில் சந்தையில் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும்.
இந்த விடயம் தொடர்பில் நீங்கள் அவதானம் செலுத்துவது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்