மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் இன்று மாலை திடீரென முடக்கப்பட்டது. அதில் சீன எழுத்துகள் காணப்பட்டதால், சீனாவைச் சேர்ந்த ‘ஹேக்கர்கள்’ ஈடுப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
‘இணையதளத்தில் எதிர்பாரதவிதமாக தவறுகள் ஏற்பட்டுள்ளன. சிறிது நேரத்துக்கு பின் முயற்சிக்கவும்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட செய்திகள் இணையதள முகப்புப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரா ராமன் ட்விட்டரில் இது குறித்து பதிவிடுகையில், ”இணையதளம் முடக்கத்தில் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தின் முகப்பில் சீன மொழி எழுத்துகள் காணப்படுகின்றன. ஆதலால், சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் யாரேனும் முடக்கி இருக்கலாம் என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சந்தேதிக்கின்றனர்.
இந்த இணையதளத்தின் பராமரிப்பை தேசிய தகவல் மையமே செய்து வருகிறது என்பதால், அவர்கள் இதை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்குப் பின், சட்டத்துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் இணையதளங்களின் இயக்கமும் சிறிது நேரத்துக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.