நடிகர் கமல்ஹாசன், இன்று அதிகாலை 3. 30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் வழியாக லாஸ்ஏஞ்சல்ஸ் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கிராமப்புறத்தின் பக்கமும், விவசாயத்தின் பக்கமும் தனது கடைக்கண் பார்வையை மத்திய அரசு திறந்திருப்பது மனதுக்கு சற்று இதமாக இருக்கிறது.
ஆனாலும், நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த பட்ஜெட் பாராமுகமாக உள்ளது. இது எனது கருத்து.
அறிஞர் பெருமக்களை கலந்து ஆலோசித்து மத்திய பட்ஜெட் தொடர்பான எனது முழு கருத்தையும் பின்னர் தெளிவாக சொல்கிறேன். மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவது என்பது புதிதல்ல.
பல ஆண்டுகளாக இதே நிைலதான் தொடர்ந்து ெகாண்டிருக்கிறது. அதே சமயம், விவசாயிகள் மற்றும் கிராமத்தின் பக்கம் கடைக்கண் பார்வை திரும்பி இருப்பது வரவேற்கத்தக்கது.
எனது அரசியல் பயணம் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் 7 நாள் சம்பளத்தை அதிகாரிகள் பிடித்தம் செய்துள்ளது தமிழக அரசின் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டத்தை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.