மது போதையில் கார் ஓட்டியதால் பதவியை இழந்த பெண் அமைச்சர்
சுவிடன் நாட்டில் மது போதையில் கார் ஓட்டியது அம்பலமானதை தொடர்ந்து அந்நாட்டு பெண் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிடன் நாட்டு உயர்க்கல்வி துறை அமைச்சரான Aida Hadzialic(29) என்பவர் தான் இந்த தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் தான் சுவிடன் நாட்டின் இளம் மற்றும் முதல் இஸ்லாமிய பெண் அமைச்சர் ஆவர்.
சில தினங்களுக்கு முன்னர் டென்மார்க் தலைநகரான Copenhagen நகரில் தங்கியிருந்தபோது இரண்டு கிளாஸ் ஒயின் அருந்தியுள்ளார்.
பின்னர், 4 மணி நேரத்திற்கு பிறகு சுவிடனில் உள்ள Malmo என்ற நகருக்கு தனது காரில் புறப்பட்டுள்ளார்.
ஆனால், டென்மார்க் மற்றும் சுவிடனை இணைக்கும் ஒரு பாலத்திற்கு அருகில் வந்தபோது அவரது காரை பொலிசார் மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது, அவரது உடலில் அளவுக்கு அதிகமாக மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தவறுக்கு பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது, ‘எனது வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு இது தான். கல்வி துறைக்கு அமைச்சராக இருந்துக்கொண்டு மற்றவர்களுக்கு தவறான உதாரணம் தரும் வகையில் நடந்துக்கொண்டதை எண்ணி வருந்துகிறேன்’ எனக்கூறியுள்ளார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள Bosnia-Hercegovina என்ற நாட்டை சேர்ந்த இவர் 5 வயதாக இருந்தபோது சுவிடன் நாட்டில் குடியேறி படிப்படியாக முன்னேறி அரசியலில் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.