மது குடிக்கும் பழக்கத்தால், உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 30 லட்சம் பேர் உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, உயிர்க்கொல்லி நோயான, ‘எய்ட்ஸ்’சால்,பலியாவோர் எண்ணிக்கையை விட அதிகம்.
மது குடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பின் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார நிறுவனம், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:உலகம் முழுவதும், மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவோர், பல வகைகளில் பாதிக்கப்படுகின்றனர். மது பழக்கத்தால், கல்லீரல் பாதிக்கப்படுவதுடன், உடலின் பல முக்கிய உறுப்புகள், அதன் வழக்கமான செயல்பாட்டிலிருந்து மாறுபட நேரிடுகிறது.
குடும்ப பிரச்னை, பெண்களுக்கு எதிரான வன்முறை, கலவரங்கள், சாலை விபத்து உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. உலகின் மிகக் கொடிய நோயாக கருதப்படும், ‘எய்ட்ஸ்’ பாதிப்பால் உயிரிழப்போரை விட, குடி பழக்கத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
கடந்த, 2016ல், உலக முழுவதும் உயிரிழந்தோர் மற்றும் அதற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், எய்ட்ஸ் நோய் பாதிப்பால், 1.8 சதவீதம் பேர், சாலை விபத்தில், 2.5 சதவீதம் பேர் மற்றும் வன்முறை, கலவரங்களால், 0.8 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே சமயம், மது பழக்கத்தால், 5.3 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்; இது, உலக மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில், மது பழக்கத்திற்கு அடிமையானோர் எண் ணிக்கை அதிகம் உள்ளது.
மது பழக்கத்தால் ஏற்படும் பின் விளைவுகளால், உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 30 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளான, இந்தியா, சீனாவிலும், மது குடிப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.உலகெங்கும் இளைஞர்கள் முதல், முதியோர் வரை அனைத்து தரப்பினரையும் மிரட்டி வரும் மனச்சோர்வு நோய், மது குடிக்கும் பழக்கம் உடையோரை மிக விரைவில் தாக்குகிறது.
மது பழக்கத்தை ஒழித்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, உலக நாடுகள் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 மடங்கு, ‘குடி’க்கும் இந்தியர்கள் : உலகம் முழுவதும், மது அருந்தும் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, உலக சுகாதார நிறுவனம், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.
அதன் விபரம்:உலக அளவில், தனி நபர் அருந்தும் மதுவின் அளவு அதிகரித்துள்ளது. இந்த மாற்றம், 2000ல் இருந்து 2005க்குள் நிகழ்ந்துள்ளது.
ஒரு ஆண்டில், தனி நபர் அருந்தும் மதுவின் அளவு, 2005ல், 5.5 லிட்டராக இருந்தது; 2010ல், 6.4 லிட்டராகஉயர்ந்தது; 2016 வரை, 6.4 லிட்டராகவே உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, 2005ல், தனி நபர் அருந்தும் மதுவின்அளவு, ஆண்டு ஒன்றுக்கு,2.4 லிட்ட ராக இருந்தது. பின், மெல்ல அதிகரித்து, 2016ல், 5.7 லிட்டராக உயர்ந்துள்ளது.
இந்திய ஆண்கள், ஆண்டுக்கு, 4.2 லிட்டர்; பெண்கள், 1.5 லிட்டர் மது அருந்துகின்றனர்.உலகம் முழுவதும், தனி நபர் அருந்தும் மது அளவு, 2025க்குள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில், மேலும் உயரும் என தெரிகிறது.இந்தியாவில் மட்டும், தனி நபர் அருந்தும் மதுவின் அளவு, ஆண்டுக்கு, 2.2 லிட்டர் வரை கூடுதலாக வாய்ப்புள்ளது.
மது அருந்துவதால் ஏற்படும் நோய்களால், 2016ல், உலகம் முழுவதும், 30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது, அந்த ஆண்டில் நிகழ்ந்தஉயிரிழப்புகளில், 5.3 சதவீதம்.
காச நோய், நீரிழிவு நோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால் உயிரிழப்போர் எண்ணிக்கையை விட, மது அருந்துவதால் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.