இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது 4 நாள் உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளன்று இலங்கை ஏ அணி பலம் வாய்ந்த நிலையை அடைந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான அப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 136 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை ஏ அணி, 2ஆவது இன்னிங்ஸில் நிஷான் மதுஷன்கவின் ஆட்டமிழக்காத இரட்டைச் சதம், ஓஷத பெர்னாண்டோவின் சதம் ஆகியவற்றின் உதவியுடன் 500 ஓட்டங்களுக்கு மே ல் குவித்தது.
அவர்கள் இருவரும் 203 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
போட்டியின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை (02) ஆட்டநேர முடிவில் இலங்கை ஏ அணி அதன் 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 580 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
நிஷான் மதுஷன்க 370 பந்துகளை எதிர்கொண்டு 24 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 207 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.
ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டத்தைவிட 2ஆம், 3ஆம், பிரக்கப்படாத 4ஆம் விக்கெட்களிலும் தலா 100க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டங்களை மதுஷன்க ஏற்படுத்தினார்.
73 ஓட்டங்களைப் பெற்ற லக்ஷித்த முனசிங்கவுடன் 2ஆவது விக்கெட்டில் 119 ஓட்டங்களையும் 80 ஓட்டங்களைப் பெற்ற நுவனிது பெர்னாண்டோவுடன் 3ஆவது விக்கெட்டில் 113 ஓட்டங்களையும் மதுஷான் பகிர்ந்தார்.
89 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கும் அணித் தலைவர் நிப்புன் தனஞ்சயவுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் மேலும் 145 ஓட்டங்களை மதுஷான் பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்து லயன்ஸ் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 467 ஓட்டங்களைப் பெற்றது.
இதற்கு அமைய 2ஆவது விக்கெட்டில் 7 விக்கெட்கள் மீதமிருக்க இங்கிலாந்து லயன்ஸ் அணியைவிட 249 ஓட்டங்களால் இலங்கை ஏ அணி முன்னிலையில் இருக்கிறது.