மது போதையில் தனது மனைவியை தொடர்ந்து தாக்கியதாக கூறப்படும் ஒருவர், அவரது மனைவியால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பொலன்னறுவை மாவட்டத்தின் புலஸ்திபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான உயிரிழந்தவர் மது அருந்திவிட்டு தனது 21 வயது மனைவியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறே மது அருந்திவிட்டு மீண்டும் ஒரு தடவை தாக்கி காயங்களை ஏற்படுத்தியதையடுத்து பெண் தற்காப்புக்காக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.