மதுபானம் தொடர்பாக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் கொண்டுவரப்பட்ட அரசிதழ் அறிவித்தல் தொடர்பாக அமைச்சரவையில் நேற்றுச் சலசலப்பு ஏற்பட்டது. மேற்கு நாடுகள் பரிந்துரைக்கும் அனைத்தையும் நாட்டில் நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்று அரச தலைவர் மைத்திரி கடும் தொனியில் வலியுறுத்தினார்.
கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய இரண்டு நிகழ்வுகளான அரச தலைவரின் பதவிக்காலம் மற்றும் நிதி அமைச்சர் கொண்டு வந்த மதுபான நிலையங்களின் நேர மாற்றம், பெண்களை வேலைக்கு அமர்த்தல் ஆகிய விவகாரங்கள் குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டன.
பதவிக் காலம்
“கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எனது செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள், இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் ஆகியோருடன் அடுத்த கட்ட வேலைத்திட்ட நகர்வுகள் குறித்துக் கலந்துரையாடினேன். அடுத்த ஆண்டுக்கான வேலைகளை ஒழுங்கமைக்கும் திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டது. விவாதத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. 19ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு அரச தலைவரின் பதவிக்காலம் குறைப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தற்போதைய பதவி காலத்துடன் தொடர்புபடாது எனவும், வேலைத்திட்டங்களை ஒழுங்கமைக்கும் போது 2020ஆம் ஆண்டு இறுதி வரைக்கும் ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிலர் அதனை 2019 ஆம் ஆண்டு இறுதி வரையில் ஒழுங்கமைத்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினர்.