மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” என வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மைதேயி மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.
மைதேயி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதேயி இன மக்களும் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு பின்பு வெடித்த மணிப்பூர் முழுவதும் படிப்படியாக வன்முறையாக மாறியது. இதன் பின்னர் மணிப்பூர் முழுவதும் 2மாதமாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மணிப்பூர் வீடியோ தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் , விதி 267ன் விவாதம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மணிப்பூர் வீடியோ விவாகரம் தொடர்பாக பிரதமர் இதுவரை பதில் அளிக்காத நிலையில் நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்கட்சியினர் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்பதாக தெரிவித்தார். மாநிலங்களவையில் விவாதத்திற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே மாநிலங்களவை முடங்கியது. கடந்த வாரம் முழுக்க இரு அவைகளும் முடங்கின.
எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியை சேர்ந்த 20 எம்பிக்கள் குழு இன்று மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளது. மணிப்பூர் சென்றுள்ள எம்பிக்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களோடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கவ்ரவ் கோகாய், பீகாரில் இருந்து ஜனதா தள் கட்சியை சேர்ந்த ராஜிவ் ரஞ்சன், அனில் பிரசாத் கட்ஜ், மேற்கு வங்கத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ், பௌலோ தேவி நெடாம், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏ.ஏ.ரஹீம், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் குமார், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஜவாத் அலி கான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
அதோடு, ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியை சேர்ந்த மஹா மஜ்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முஹமத் ஃபாஷில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த முகமத் பஷீர், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரேமச்சந்திரன், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷுஷில் குப்தா, சிவ சேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் ஷவாந்த், ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியை சேர்ந்த ஜெயந்த் சிங் ஆகியோரும் இந்தியா கூட்டணி சார்பில் மணிப்பூர் சென்றுள்ளனர்.
இந்த எம்பிக்கள் குழு இன்று பாதிக்கப்பட்ட மக்களையும், நாளை மணிப்பூர் ஆளுநரையும் சந்திக்கின்றனர். மணிப்பூர் சென்றுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..
“ மணிப்பூர் மக்கள் நீதியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். மணிப்பூர் கலவரத்தில் தனது கணவன் மற்றும் குழந்தையை இழந்து , தங்களது மகள்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வுகளை காணும்போது பரிதாபாமாக இருந்தது” என கனிமொழி தெரிவித்தார்.