மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36வது ஆண்டு நினைவேந்தல் புனித மரியாள் தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அருட்தந்தையின் சமாதியில் வியாழக்கிழமை (6) உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அனுஷ்டிக்கப்பட்டது.
1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுவினால் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற அருட்தந்தையின் 36ஆவது நினைவேந்தலில் சர்வமத தலைவர்கள், வனபிதாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அன்னாரின் உறவினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அன்னரின் ஆத்மசாந்தி வேண்டி, அவரின் சமாதியில் உள்ள திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி விசேட பிரார்த்தனையுடன் அஞ்சலி செலுத்தினர்.

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ 09.08.1948 அன்று மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்தவர் ஆவார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை சென்.மேரிஸ் பாடசாலையிலும், உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கற்றார்.
தனது குருக்கல்வியை இந்தியாவின் பெங்களூரிலும் சென்னையிலும் பயின்று 1972.09.21 அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் ஏற்றார்.
அதன் பின்னர், உதவி பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவாலயத்திலும் பணிபுரிந்து 1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிர்வாகத்துக்கு நிதிப்பொறுப்பாளராக செயலாற்றினார். 1981ஆம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார்.
அதே காலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்தார். 1984ஆம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்ற இவர் உயிர் துறந்த பின்னர், இவருக்கு விடுதலைப்புலிகளின் தலைவரால் ‘நாட்டுப்பற்றாளர்’ கௌரவம் வழங்கப்பட்டது.
