மட்டக்களப்பில் இரண்டு பொலிசார் நேற்று முன்தினம் அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
நேற்று இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், உயிரிழந்த பொலிசாரின் உடல்கள் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டது. இதில், கொல்லப்படுவதற்கு முன்னர் இரண்டு பொலிசாரும் தாக்குதலாளிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதும், பொலிஸ்காரர்களை அவர்கள் கொடூரமாக கொன்றதும் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் மேலும் தெரியவருவது
வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அண்மையாக உள்ள பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த இரண்டு பொலிசாரே கொல்லப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணிக்கு சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
அந்த காவலரணில் மூன்று பொலிசார்- இரண்டு தமிழ் பொலிசாரும், ஒரு சிங்கள பொலிஸ்காரரும்- கடமையிலிருப்பது வழக்கம். அதில் காரைதீவை சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடல்நலமின்மையால், காவலரண் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு, நள்ளிரவில் அங்கிருந்து திரும்பி சென்றுவிடுவது வழக்கம். இன்று அதிகாலை 1.10 மணியளவில் அவர் கையொப்பமிட்டுவிட்டு திரும்பி சென்றதன் பின்னரே, கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2.00 மணியளவில் அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், காவலரண் வாசலில் ஒரு பொலிஸ்காரர் நிலத்தில் வீழ்ந்திருந்ததை அவதானித்து, பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார்.
தாக்குதலாளிகள் நன்றாக திட்டமிட்டு, இருவர் மட்டும் தனித்திருக்கும் சமயத்தில் இந்த தாக்குதலை நடத்தியதாக பொலிசார் கருதுகிறார்கள். இதற்காக நீண்டநாள் உளவு பார்த்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.
சுமார் நால்வர் கொண்ட குழுவே தாக்குதலை நடத்தியிருக்கலாமென கருதப்படுகிறது. சிங்கள பொலிஸ்காரர் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து வெட்டப்பட்டும் கொல்லப்பட்டுள்ளார். தமிழ் பொலிஸ்காரர் கைகள் பின்னால் கட்டப்பட்டு, நிலத்தில் முகம் குப்புற படுக்க வைத்து, பின்தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது தலையை ஊடறுத்து நிலத்திற்குள் பாய்ந்த ரவையை, நிலத்தை அகழந்து சுமார் 20 அடி ஆழத்தில் பொலிசார் மீட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, தமிழ் பொலிஸ்காரரின் கை விரல்களில் எலும்பு உடைந்துள்ளன. அவர் தாக்குதலாளிகளுடன் மோதியதால் உடைவு ஏற்பட்டிருக்கலாமென பிரேத பரிசோதனை அறிக்கை குறிப்பிடுகிறது.
சிங்கள பொலிஸ்காரரின் நெஞ்சில் மூன்றுமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது. இதயம் வரை கத்தி பாய்ந்துள்ளது. வயிற்றிலும் கத்திக்குத்து காயங்கள் உள்ளன. பின்னர், கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பொலிசாரிடம் இருந்த ரிவோல்வர்களையும் தாக்குதலாளிகள் அபகரித்து சென்றுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் தரப்பிலிருந்து உத்தியோகப்பற்றற்ற முறையில் கிடைத்த தகவல் ஒன்றின்படி, காவலரணிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள சந்தியொன்றிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் சிசிரிவி கமரா பதிவுகள் பொலிசாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அதிகாலை 2 மணிக்கு அண்மித்த சமயத்தில் தாக்குதல் நடந்த இடத்தை நோக்கி இரண்டு மோட்டார்சைக்கிள்கள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. எனினும், அதில் இலக்கத்தகடு தெளிவில்லாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் மட்டக்களப்பு துயிலுமில்லமொன்றில் மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்து நடத்திய குழுவொன்று நேற்று பொலிசாரின் தீவிர விசாரணை வலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தது. இந்த அணிக்கு சுவிற்சர்லாந்தில் இருந்து பணம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த அணியை சேர்ந்த முன்னாள் போராளியொருவர் நேற்று விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்த அணி விசாரணை வலயத்தில் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, நேற்று மட்டக்களப்பிற்கு சென்றிருந்த சிங்கள ஊடகவியலாளர்கள் குழுவொன்று, சம்பவ இடத்திற்கு அண்மையில் உள்ள துயிலமில்லமொன்றிற்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டியதையும் அவதானிக்க முடிந்தது.