மக்கள் விடுதலை முன்னணிக்கு சம்மி சில்வா நிதி வழங்கினார் என்று குறிப்பிட்டதை என்னால் உறுதிப்படுத்த முடியாது.
ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரே அந்த தகவலை எனக்கு குறிப்பிட்டார் என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான இவர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.வீதியில் செல்பவர்கள் குறிப்பிடுவதை சபையில் குறிப்பிட கூடாது.
இவர் பதிவு செய்யப்பட்ட கப்பம் பெறுநர் என்பதை நீதிமன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.அதனையே நான் குறிப்பிட்டேன் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற கலஹா பத்ரவதி தேசிய பிக்குமார் பராமரிப்பு நிலைய நம்பிக்கைப் பொறுப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டப்பட்டது.
ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க உரையாற்றியதாவது,
நான் சபையில் இல்லாத போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க என்னை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நான் குறிப்பிட்ட விடயத்தை கொண்டு ஆத்திரமடைய வேண்டிய தேவை இல்லை.மக்கள் விடுதலை முன்னணிக்கு சம்மி சில்வா நிதி வழங்கியுள்ளார் என்று குறிப்பிட்டேன்.இந்த விடயம் தொடர்பில் கிடைத்த தகவலை குறிப்பிட போவதில்லை.
கப்பம் விவகாரத்தை அவர் குறிப்பிட்டார் அது குறித்து நான் பேச போவதில்லை.ஏனெனில் இந்த விடயம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.நான் பதிவு செய்யப்பட்ட கப்பம் பெறுநர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.எந்த நீதிமன்றமும் அவ்வாறு என்னை பதிவு செய்யவில்லை.
ஆட்சியில் இருந்த அரசாங்கங்கங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.
மைத்திரி – ரணில் அரசாங்கத்தை கொண்டு வர முன்னிலை வகித்தார்கள்.இவரது மகன் ஸ்ரீ லங்கா எயார் லைன் விமான சேவையில் பணியில் இருந்த போது பலர் சேவையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் டீல் செய்து தனது மகனை மிஹின் லங்கா விமான சேவைகள் நிறுவனத்துக்கு மாற்றிக் கொண்டார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பொய்யுரைக்க வேண்டாம்.
மஹிந்தவிடம் நாங்கள் வேலை கேட்பதா,எமது பிள்ளைகள் என்று அறிந்தவுடன் அவர்களை ஒருபோதும் நீங்கள் இணைத்துக் கொள்ளமாட்டீர்கள் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரசன்ன ரணதுங்க,உண்மையை குறிப்பிடும் போது வெட்கப்பட வேண்டாம்.வெட்கம் என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஏனைய விடயங்களை தனித்து விவாதித்துக் கொள்வோம்.நான் சபையில் இல்லாத போது சம்மி சில்வா எங்களுக்கு நிதி வழங்கினார் என்று குறிப்பிட்டீர்கள்,தயவு செய்து அதனை ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள் என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடவான பிரசன்ன ரணதுங்க அந்த குற்றச்சாட்டை என்னால் உறுதிப்படுத்த முடியாது.ஏனெனில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே எனக்கு அந்த தகவலை வழங்கினார்.
மீண்டும் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க யார் அது, இவர் ஆளும் தரப்பின் பிரதம கொறடா பொறுப்புடன் செயற்பட வேண்டும்.அதை விடுத்து அவர் சொன்னார்.இவர் சொன்னார் என்று கருத்துக்களை குறிப்பிட கூடாது.நான் உண்மையை குறிப்பிடுகிறேன்.வீதியில் செல்பவர்கள் குறிப்பிடுவதை குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை என்றார்.