நிதி நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்துள்ள நிலையில், டொலர் தட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுமுறையை கொண்டாடவெளிநாடுகளுக்கு செல்வது நியாயமானதா என கேள்வி எழுப்பும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, மக்களை மாத்திரம் தியாகம் செய்ய வேண்டும் எனக்கூறிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு செயற்படுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத அதேபோல் சகித்துக்கொள்ள முடியாத விடயமாகும் எனவும் விமர்சித்தார்.
நாட்டில் டொலர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ள சூழலில், அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய 1,500 ற்கும் அதிகமான கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ள சூழலில், சர்வதேச கடன்களை பெற்று நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை தக்கவைக்க வேண்டியுள்ள நிலையில், சமையல் எரிவாயுவிற்கும் மக்கள் வரிசையில் நின்று முட்டி மோதிக்கொண்டுள்ள கால கட்டத்தில், விவசாயிகள் உரத்தை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியாது தமது வாழ்வாதாரத்தை எண்ணி கஷ்டப்பட்டுக்கொண்டுள்ள சூழலில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த 80 ற்கும் அதிகமான உறுப்பினர்கள் தமது விடுமுறையை கொண்டாட வெளிநாடு செல்வது ஒழுக்கமான, மனசாட்சிக்கு இணங்கக்கூடிய விடயமா என்ற கேள்வி எழுகின்றது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இவ்வாறு செயற்படுவதன் மூலமாக நாட்டு மக்களின் மனநிலை வேதனைப்படும் என்பதை ஏன் அவர்கள் உணரவில்லை என்ற கேள்வி எம்மத்தியிலும் உள்ளது.
அதையும் தாண்டி இவ்வாறு வெளிநாடுகளில் சென்று டொலர்களை நாசமாக்கும் அமைச்சர்கள் இங்கு வந்து தேசிய அபிவிருத்தி, நாட்டுக்குள் டொலர்களை கொண்டுவரும் செயற்பாடுகள் குறித்து பேசுவதற்கு தகுதி உள்ளதா என்ற கேள்வியை நாமும் கேட்கவேண்டியுள்ளது.
இதற்கு முன்னர் இருந்த நிலைமையில் முற்றிலும் மாறுபட்ட, நிதி நெருக்கடிகளுக்கு சகலரும் முகங்கொடுத்து வருகின்ற நிலையில் மக்களை மாத்திரம் தியாகம் செய்ய வேண்டும் எனக்கூறிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு செயற்படுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத அதேபோல் சகித்துக்கொள்ள முடியாத விடயமாகும் எனவும் அவர் கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]