முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தால் (ஓம்பி) இன்றைய தினம் (19) மேற்கொள்ளப்பட இருந்த பதிவு விசாரணை நடவடிக்கைகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த ஓ எம் பி அலுவலக ஆணையாளர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டு பதிவு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யவேண்டும் அதன் பின்னர் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் ஆகவே இன்றைய பதிவு நடவடிக்கையில் கலந்துகொண்டு உங்கள் விபரங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுகொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எத்தனை தடவை பதிவுகளை விசாரணைகளை எத்தனை ஆணைக்குழுக்களிடம் முன்வைத்துள்ளோம் எல்லாமே ஏமாற்று வேலை ஆகவே இவ்வாறு பதிவு நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டு கொண்டனர்.
அதன் பின்னர் தாம் பதிவு நடவடிக்கை விசாரணை என்பனவற்றை நிறுத்துவதாக தெரிவித்த ஓம்பி அலுவலக ஊழியர்கள் மீண்டும் மாவட்ட செயலகத்துக்குள் சென்று வாக்குறுதிக்கு மாறாக பதிவு நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில் விசாரணை இடம்பெறும் இடத்துக்கு சென்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு நடடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு பொய் வாக்குறுதியை வழங்கிவிட்டு மீண்டும் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆத்திரமடைந்து பதிவு நடவடிக்கைக்கு வந்திருந்த ஓ எம் பி அலுவலகத்தினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தலையிட்ட பொலிஸார் அலுவலக வளாகத்திலிருந்து எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது பொலிஸார் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்தும் வகையில் கடுமையாக நடந்துகொண்டதோடு பொலிஸ் புகைப்படவியலாளர் என தன்னை அடையாளப்படுத்திய புலனாய்வாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்ததோடு ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுத்ததோடு முரண்படும் வகையிலும் நடந்துகொண்டார்.