பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்படும் சர்வ கட்சி அரசாங்கத்திற்கு மக்களின் நலனை கருத்தில்கொண்டு நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்கத் தயார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மேலும் தற்போது சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள இ.தொ.கா. அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரால் சர்வ கட்சி அரசாங்கம் குறித்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உக்கிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.
அதற்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிபந்தனைகள் எவற்றையும் முன்வைக்காமல் நாட்டு மக்களின் நலனுக்காக ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் மலைய மக்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
மலையக மாணவர்களின் கல்வி ,சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவை தொடர்பில் எதிர்காலத்தில் முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலும் நாம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம். மாகாண ஆளுனர்கள் மற்றும் மாவட்ட அதிபர்கள் ஊடாக அதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்றார்.