தன்னெழுச்சி போராட்டக் காரர்களால் கைப்பற்றப்பட்ட, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை, கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய மூன்று அரச கட்டிடங்களையும் முழுமையாக மீள கையளிக்கவும், அக்கட்டிடங்களிலிருந்து வெளியேறவும் போராட்டக் காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து 14 ஆம் திகதி வியாழக்கிழமை கோட்டை – காலி முகத்திடல் – கோட்டா கோ கமவில் விஷேட செய்தியாளர் சந்திப்பை நடாத்தி போராட்டத்துடன் தொடர்புடைய செயற்பட்டாளர்கள் அறிவித்ததுடன், குறித்த மூன்று அரச கட்டிடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறினர்.
எனினும் கைப்பற்றப்பட்ட, பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியான தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் கடைமைகளுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படா வண்ணம் அதனை தமது பொறுப்பில் தொடர்ந்து வைத்திருக்க போராட்டக் காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஆட்சியாளர்களுக்கு தொடர்ச்சியாக போராட்டக் களத்திலிருந்து ஒரு வலுவான அரசியல் செய்தியை வழங்கும் முகமாக , செயலகத்தினை தொடர்ந்து தமது பொறுப்பில் வைத்திருக்க தீர்மானித்ததாகவும், மக்களின் கோரிக்கைகளை வெல்லும் வரை தொடர்ச்சியாக அப்பகுதியில் இருந்து போராட்டத்தை தொடரப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
‘ ஜனாதிபதி செயலகம் என்பது பழைய பாராளுமன்ற கட்டிடமாகும். மக்கள் தமது இறைமையையை நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றின் ஊடாக செயற்படுத்த அதிகாரமளித்திருக்கும் நிலையில், தற்போது அதே மக்கள் தமது இறைமையையை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க எத்தனித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலக நடவடிக்கைகள் பெரும்பாலும் கட்டிடத்தின் பின்னால் அமைந்துள்ள பகுதியிலேயே இடம்பெறும்.
எனவே நாம் செயலகத்தின் முன் பகுதியை தொடர்ந்து எமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அமைதிப் போராட்டத்தை தொடரவுள்ளோம்.
இதனூடாக புதிய பாராளுமன்றத்துக்கு நாம் பலமான அரசியல் செய்தியை தொடர்ச்சியாக வழங்கவுள்ளோம்.’ என போராட்டக் காரர்கள் சார்பில் ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் குறிப்பிட்டார்.
அந்தவகையில் காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களின் சார்பில் செய்தியாளர் சந்திப்பில் முதலாவதாகக் கருத்து வெளியிட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கூறிய விடயங்கள் வருமாறு:
நாமனைவரும் ஒன்றிணைந்து 97 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவந்த மக்கள் போராட்டம் இன்று (14) முக்கியமானதொரு வெற்றியைப் பதிவுசெய்திருக்கின்றது.
சபாநாயகரின் கருத்தின் பிரகாரம் மிகமோசமான ஆட்சியாளரான கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியிருக்கும் நிலையில், சட்டரீதியில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் என்ற அடிப்படையில் நாம் மக்கள் போராட்டத்தில் வெற்றிகண்டிருக்கின்றோம்.
இன்றளவிலே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எந்தவொரு நாட்டிற்கும் செல்லமுடியாத நிலையேற்பட்டிருக்கின்றது. அவர் ஓர் அரசியல் அநாதையைப்போன்ற நிலையில் இருக்கின்றார். இலங்கை மக்களுக்கு இழைத்த பாவங்களுக்கும் துரோகங்களுக்குமான தண்டனை அவருக்கு இப்போது கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அந்தப் பதவிலிருந்து துரத்திடிக்கும் போராட்டத்தில் மக்கள் வெற்றியடைந்திருக்கின்றார்கள் என்று அறிவிக்கின்றோம்.
இனியொருபோதும் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதியாக முடியாது என்ற உறுதிப்பாடு ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கவும் அவரது பதவியிலிருந்து விலகவேண்டும் என்பதே எமது இரண்டாவது கோரிக்கையாக இருக்கின்றது.
நாடளாவிய ரீதியிலிருந்து தன்னிச்சையாக ஒன்றிணைந்த மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அவரைப் புறக்கணித்தார்கள்.
எனவே இலங்கை மக்களின் விருப்பத்திற்கு முரணான வகையில் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான உரிமை ரணில் விக்ரமசிங்கவிற்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
அதேவேளை மக்களின் வெற்றியைத்தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இதுவரையான காலப்பகுதியில் நாம் கைப்பற்றிய ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகை ஆகிய மூன்று முக்கிய இடங்களிலிருந்தும் வெளியேறுவதற்கு ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட காலிமுகத்திடல் பகுதியில் எமது போராட்டம் தொடரும். அங்கு வருகைதருமாறு நாட்டுமக்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம்.
அங்கிருந்து அஹிம்சை வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம். சொத்துக்களைக் கைப்பற்றிக்கொள்வதிலோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதிலோ எமக்கு எந்தவொரு வெற்றியும் இல்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றோம்.
மாறாக ஜனாதிபதியையும் பிரதமரையும் பதவி விலகச்செய்வதும், மக்கள் ஆணையின் பலத்தை மேலோங்கச்செய்வதுமே எமது உண்மையான வெற்றியாகும். எனவே ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் கூறியதாவது:
போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் செயற்பாடுகளும், அவர்களால் முக்கிய கட்டமைப்புக்கள் கைப்பற்றப்பட்டமையும் சில தரப்பினரால் வன்முறை செயற்பாடுகளாகக் காண்பிக்கப்படுகின்றன.
ஆனால் மக்களால் மக்களுக்காக நடத்தப்பட்டுவரும் இந்தப் போராட்டம் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அமைதியான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டுவந்திருக்கின்றன.
அதேபோன்று ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களும் மக்களுக்குச் சொந்தமான பொதுச்சொத்துக்களாகும். ஆகவே அவற்றைக் கையகப்படுத்துகின்ற உரிமை மக்களுக்கு இருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.
அடுத்ததாகப் பேசிய ராஜ்குமார் ரஜீவ்காந்த் பின்வருமாறு தெரிவித்தார்:
ஆரம்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியிலிருந்து விலகவேண்டும் என்பதே காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது.
ஆனால் பின்னர் அவர்களைப் பாதுகாப்பதற்கு முயன்ற ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகவேண்டும் என்பது போராட்டக்காரர்களின் நிபந்தனையாக மாறியது.
இவ்வாறானதொரு பின்னணியில் போராட்டங்களின் மூலம் நாம் ஏற்கனவே கைப்பற்றிய 4 இடங்களில் ஜனாதிபதி செயலகம் தவிர்ந்த ஏனைய 3 இடங்களைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தாலும், ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரை மக்களின் துணையுடன் மேலும் தீவிரமாக எமது போராட்டம் தொடரும் என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றோம்.
அதேவேளை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மக்களின் மீது ஆயுதங்களையும் அடக்குமுறைகளையும் பிரயோகிக்கும் செயற்பாடுகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.