நாட்டின் விவசாய நெருக்கடியை இராணுவத்தை கொண்டு சமாளிப்பேன் என கூறிய கோட்டாபய ராஜபக்ஷ இன்று இராணுவத்தின் பாதுகாப்பில் பதுங்கு குழியில் பதுங்கிக்கொண்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் 150 தலைகளும், இராணுவமும் பலம் அல்ல மாறாக மக்களின் ஆணையே பலம் என்பதை இப்போதாவது விளங்கிக்கொள்ளுங்கள் என சபையில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக, இரண்டு கோடி மக்கள் இன்று ஜனாதிபதியை பைத்தியக்காரன் என விமர்சிக்கின்றனர் எனவும் கூறினார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை கூடிய வேளையில்,பாராளுமன்றத்தை சுற்றிவளைத்து மக்கள் போராடிய வேளையில் அனுரகுமாரவுடன் இருந்த முகமூடி அணிந்த நபர் யார் என கேள்வி எழுப்பியதுடன், நாட்டில் ஏற்படும் மக்கள் போராட்டங்களின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளதாகவும் சபையில் ஆளுங்கட்சியினர் குற்றம் சுமத்தினர்.
இது குறித்து ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தனது பக்க கருத்துக்களை முன்வைக்கும் போதே இவற்றை கூறினார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தின் தலையில் உள்ள சிந்தனைக்கும் நாட்டில் இடம்பெறும் யதார்த்த நிலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தவறான கருத்துகளை இவர்கள் முன்வைக்கின்றனர்.
மக்கள் எனது வாகனத்தை நிறுத்திய வேளையில் நானும் மக்கள் முன்னிலையில் தைரியமாக நின்றேன். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிவித்தேன். இன்று மக்கள் எழுப்பும் கேள்விகளை கடந்த 10 ஆண்டுகளாக நான் கூறிக்கொண்டுள்ளேன் என்பது தெரிவித்தேன்.
இன்றைய நிலையில் அரசாங்கத்தில் எவரேனும் ஒருவர் மக்களை எதிர்கொண்டு காட்டுங்கள். முடியும் என்றால் மக்களின் போராட்டத்திற்கு அரசாங்கத்தில் எவரேனும் ஒருவர் போய்ப்பாருங்கள்.
இந்த நாட்டில் பட்டப்பகலில் பலர் கொல்லப்பட்டனர், பலர் கடத்தி செல்லப்பட்டனர், தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணமான நபர்கள் யார் என்பது இன்றுவரை கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவங்கள் இடம்பெற்ற காலங்களில் நாட்டின் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டார். இன்று அவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். இன்றும் அதே தவறுகள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன.
பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் காணப்பட்ட கொடூரமான மனநிலையே இன்று அவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்திலும் காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள், தாக்குதல், கடத்தல்களுக்கு நேரடியாக தொடர்புபட்ட நபர் இன்று ஜனாதிபதி ஆசனத்தில் உள்ளார். ஆகவே எமது பாதுகாப்பை நாமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் எமது உயிரை சாதாரணமாக இழக்கமாட்டோம்.
எமது உயிரை இலகுவாக பறிக்கலாம் என நீங்கள் நினைக்கலாம், அது ஒருபோதும் இடம்பெறாது. இன்று மக்கள் பொறுமை இழந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். நாட்டின் விவசாய நெருக்கடியை இராணுவத்தை கொண்டு சமாளிப்பேன் என கூறிய கோட்டாபய ராஜபக்ஷ இன்று இராணுவத்தின் பாதுகாப்பில் பதுங்கு குழியில் பதுங்கிக்கொண்டுள்ளார்.
மக்களின் கோரிக்கைகளை சிறிதும் கருத்தில் கொள்ளாது ராஜாக்கள் போன்று வாழ்ந்ததன் விளைவே இன்று அவரை பதுங்கு குழியில் வாழ வைத்துள்ளது. மக்களின் மன அழுத்தம், அவர்களின் வேதனையின் விளைவாக இன்று இவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது.
பாராளுமன்றத்தில் வெறுமனே 150 தலைகளும், இராணுவமும் பலம் அல்ல மாறாக மக்களின் ஆணையே பலம் என்பதை இப்போதாவது விளங்கிக்கொள்ளுங்கள். மக்களின் அதிகாரத்தை கண்டு இன்று அஞ்சுகின்றீர்கள்.
இரண்டு கோடி மக்கள் இன்று ஜனாதிபதியை பைத்தியக்காரன் என விமர்சிக்கின்றனர். மக்களிடம் இருந்து முதலில் உங்களை பாதுகாத்துகொள்ள முயற்சியுங்கள். மக்களை ஒருபோதும் வன்முறையின் பக்கம் திருப்ப நாம் நினைக்கவில்லை.
எமது மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எமதும் நிலைப்பாடாகும். ஆனால் மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு செவி மதுக்க வேண்டும். மக்களின் எதிர்ப்பு போராட்டத்தை தாக்குபிடிக்க முடியாது இன்று ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதி குறித்து ஆளுந்தரப்பினர் பேசுகின்றனர் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]
Comments 3