மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டாம். அதிகாரத்தில் உள்ளவர்களும் தேர்தல் சட்டத்தை மீறாது செயற்பட வேண்டும். இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் திணைக்களத் தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்தாவது-,
வாக்களர் அட்டைகளை உரிய இடங்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை இன்று (நேற்று) ஆரம்பித்துள்ளோம். அரசியல் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் தமது அதிகாரங்களை பயன்படுத்தி தேர்தல் சட்டங்களை மீற வேண்டாம் என்பதை நாம் ஆரம்பத்தில் இருந்தே கூறுகின்றோம். அதேபோல் அரச சொத்துக்களை பயன்படுத்தவோ அல்லது முறைகேடாகவோ பயன்படுத்தவேண்டாம்.
அதேபோல் மக்களும் பொருள்களை வாங்கும் நோக்கத்தில், சொற்ப தேவைகளுக்காக வாக்களிக்கவும் வேண்டாம். மக்களும் தேர்தல் சட்டத்தை சரியாக கையாள வேண்டும். தேர்தல் ஊழல் இடம்பெற்று வருகின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. கடந்த காலங்களில் இருந்து தேர்தல் ஊழல் இடம்பெற்று வருகின்றது.