வடக்கு மாகாண சபையிடம் நிதி வளம் மிகக் குறைவாகவே காணப்படுவதால், தற்போது சபை பொதுமக்களிடம் பங்களிப்பைக் கோரியுள்ளது. மலைபோல் குவிந்துள்ள வேலைகளைச் செய்துமுடிக்கவே பொதுமக்களின் பங்களிப்பை – நன்கொடையைச் சபை கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றுப் பகிரங்கமாக விடுத்தார்.
வடக்கு மாகாண சபையிடம் நிதி வளங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால் முழுமை செய்யப்படவேண்டிய வேலைகளோ மலையளவாகக் குவிந்திருக்கின்றன. ஆகவே கிராம அபிவிருத்தி தொடர்பான வேலைகளில் மக்களின் பங்களிப்புக்களை நாங்கள் நாடி நிற்கின்றோம். அவை போதியளவு கிடைக்கப் பெறுகின்றபோது அபிவிருத்திப் பணிகள் சிறப்புற நடைபெறும்” என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பேசாலை கடற்கரைப் பூங்கா, 2017ஆம் ஆண்டு பி.எஸ்.டி.ஜி நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3.9 மில்லியன் ரூபா செலவில் அழகுபடுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக நேற்றுக் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:சுற்றுலா மையங்கள் கூடுதலாகக் காணப்படுகின்ற மன்னார்ப் பிரதேசத்தில் இன்னும் பல அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளபோதும் உரிய நிதிமூலங்கள் கிடைக்காமையால் அவை தடைப்பட்டுள்ளன. இந்த வேலைகள் நிச்சயமாக அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்படும்.
சுமார் 30 ஆண்டுகால தொடர்ச்சியான போரின் விளைவாக வடபகுதியின் வளங்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், எமது மக்கள் எதுவித அபிவிருத்திகளும் இன்றி வாழவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலை மாற்றப்பட்டு மக்கள் சுயமாக இயங்கக்கூடிய இன்றைய நிலையில் சுற்றுலாத்துறை தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை வடக்கு மாகாணசபை மேற்கொண்டுவருகின்றது.
சுற்றுலாத்துறைக்கான நியதிச் சட்டங்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடற்கரைப் பூங்கா இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கும், இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மாலை வேளைகளில் அமர்ந்திருந்து காற்று வாங்குவதற்கும், நடைப் பயற்சி, தேகப் பயிற்சி போன்ற பயிற்சிகளைச் செய்வதற்கும்ஏற்றவையாக இருக்கும்.
ஒவ்வொரு சுற்றுலா மையமும்அந்தந்தப் பகுதிகளுக்கு வருவாயைத் தேடிக் கொடுப்பதுடன் பொருளாதார நிலையில் நலிந்த நிலையிலுள்ள அந்தப் பகுதி மக்கள் தமது பொருளாதாரத்தை விருத்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளமுடியும்.
உதாரணமாக பேசாலை கடற்கரைப் பூங்காவில் மக்கள் அதிகம் கூடுகின்றபோது இந்தப் பகுதிகளில் சுண்டல், கடலை வியாபாரம் மற்றும் சிற்றுண்டி வியாபாரங்கள், தேனீர் வியாபாரங்கள் போன்ற பல வர்த்தக நடவடிக்கைகளுக்கு நல்ல மவுசு ஏற்படும். அதேபோன்று இவ்வாறான கடற்கரைகளில் உள்ள தனியார் நிலங்களில் அந்த நிலச் சொந்தக்காரர்கள் அழகான சிறிய குடில்களை சட்டப்படி அமைத்து அதனை சுற்றுலாப் பயணிகளின் பாவனைக்காக குறைந்த வாடகைக் கட்டணத்தில் கையளிக்கின்ற போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
பேசாலையைப் பொறுத்த வரையில் வருடத்தின் 12 மாதங்களும் அவர்களுக்கு வாய்ப்பான மாதங்களே என்று நம்புகின்றேன். இங்கு கடல் உணவுகளுக்கு பஞ்சமில்லை. ஆதலால் இந்தப் பகுதிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் கடல் உணவுகளில் தயாரிக்கப்பட்ட சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த உள்ளூர் உணவு வகைகளை விரும்பிஅருந்த வழிவகைகளை உண்டுபண்ணலாம்.
சாரதிகள் கவனமில்லை
வீதிகள் சீரமைப்புச் செய்யப்பட்டு காப்பெட் வீதிகளாக மாற்றப்பட்ட பின்னர் 1½ மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து பேசாலைக்கு வரக்கூடியதாக இருக்கின்றது. அதேபோன்று பேசாலை – கொழும்புப் பிரயாணமும் இலகுவாக்கப்பட்டிருக்கின்றது. வீதிகள் செப்பனிடப்பட்ட பின்னர் பிரயாணம் இலகுவாக்கப்பட்டது. ஆனால் வீதி விபத்துக்கள் இங்கு அதிகரித்துள்ளன என்று அறிகின்றேன். இது கவலைக்குரியது. சாரதிகள் வீதி ஒழுங்குகளை முறையாகக் கவனிக்காத காரணத்தாலேயே இந்த விபத்துகள் ஏற்படுகின்றன – என்றார்.