உலக மக்களின் மகிழ்ச்சித் தன்மை குறைந்துக் கொண்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
உலகெங்கும் உள்ள அனைத்து மக்களும் மகிழ்வுடன் வாழ்வதாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி என்பது மாறுபடுவது போல மகிழ்ச்ச்யின் அளவும் மாறு படுவது இயற்கையே. இந்த மகிழ்ச்சி என்பது தினசரி ஏற்படும் பல மனக் கவலைகள், மன அழுத்தம் உள்ளிட்ட பல இனங்களுடன் தொடர்புடையது ஆகும். இது குறித்து கெயில்அப் என்னும் ஆய்வு நிறுவனம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி உள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில் உலகெங்கும் உள்ள 146 நாடுகளில் இருந்து 1,64,000 மக்களிடம் அவர்களின் மனத் துயரங்கள், மன அழுத்தம், கோபம், சோகம் ஆகியவைகள் குறித்து கேள்விகள் எழுப்பப் பட்டன. அவர்களின் பதிலை ஆராய்ந்து ஒரு ஆய்வறிக்கையை நேற்று இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான முகமது யூனுஸ், “மொத்தத்தில் உலகில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் மன அழுத்தம், கவலை மற்றும் துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடா வருடம் இந்த மகிழ்ச்சியின் அளவு குறைந்துக் கொண்டு வருகிறது. இதற்கு முந்தைய வருடங்களை விட தற்போது மகிழ்ச்சித் தன்மை பல மடங்கு குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த வருடம் மகிழ்ச்சித்தன்மையின் அளவு மிகவும் குறைவாகி உள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் நான்கு மக்களில் மூவர் சிறிதும் மகிழ்ச்சியின்ற் வாழ்கின்றனர். அங்கு நிலவும் வறுமையை பலர் காரணமாக சொல்கின்றனர். ஆனால் பல வளர்ச்சியடைந்த மற்றும் செல்வம் பொருந்திய நாடுகளில் வசிப்போரும் மகிழ்வுடன் வாழவில்லை என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.” என கூறி உள்ளார்.
பொருளாதார ஆர்வலரான ஜான் இமானுவேல், “உலகெங்கும் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகையில் மகிழ்ச்சித் தன்மை குறைந்து வருவது கவலையை அளிக்கிறது. எனவே பொருளாதார நெருக்கடி மட்டுமே மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை பாதிக்கிறது என நினைப்பது தவறாகும். அதே நேரத்தில் சமுதாயத்தில் மரியாதையுடன் நடத்தப்படும் பலரும் தமக்கு சமுதாய வாழ்வில் திருப்தி இல்லாததாக கூறி உள்ளதும் கவனிக்கத் தக்கது” என கூறி உள்ளார்.