மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் சீர்குலைந்த அம்பாந்தோட்டை மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான திட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்டத்தில் அனர்த்தத்துக்குள்ளான வீடுகளை மீள நிர்மாணித்தல், அழிவுற்ற வீதிகள், பாடசாலைகள், நீர்ப்பாசன கட்டமைப்புகள் போன்றவற்றை புனரமைத்தல், பயிர்நிலங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருதல் போன்றவற்றுக்காக முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் அலுவலர்களிடம் வினவிய ஜனாதிபதி, அச் செயற்பாடுகளை துரிதப்படுத்தி, முறையாக முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வீதிகள், பாலங்களை திருத்துவதற்கான செலவு மதிப்பீடுகளை விரைவாக வழங்குமாறும் அதற்கான முதற்கட்ட நிதியை வழங்க நடவடிக்கை எடுப்படும்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்கான உரம் மற்றும் விதை நெல்லை வழங்குவதற்கு விவசாய அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவிர, நீர்ப்பாசன கட்டமைப்புகளை திருத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கவும், மண்சரிவு அபாயம் நிலவும் பாதுகாப்பற்ற இடங்களில் குடியிருக்கும் மக்களை அந்த இடங்களிலிருந்து அகற்றி, பாதுகாப்பான வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றுவதற்காக பிரதேச அரசியல்வாதிகளின் ஒப்புதலுடன் முறையான திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி, தெளிவுபடுத்தினார்.
இக் கலந்துரையாடலில், அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, மகிந்த அமரவீர, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வாரூபவ் ராஜாங்க அமைச்சர் துலிப் வெதஆராச்சி உள்ளிட்ட மாவட்ட அரசியல் பிரதிநிதிகளும் அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் டபிள்யூ.எச்.கருணாரத்ன உள்ளிட்ட அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோட்டையாக கருதப்படும் அவரின் சொந்த ஊரான அம்பாந்தோட்டையில் இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையிலான கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக தென் மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கையில் இணைந்து செயற்படுவதும் மக்கள் பேசப்படும் பொருளாக மாறியிருக்கிறது.