மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
துளசி என்றால் ‘தன்னிகரில்லாதவள்’ என்று அர்த்தமாகும். துளசி என்பது ஒரு வகை செடியின் இலையாகும். இதை துள + சி என்பார்கள். இதற்கு ‘ஒப்பில்லாத செடி’ என்று பொருள்.
துளசிக்கு ‘திருத்துழாய்’ என்றும் ஒரு பெயர் உண்டு. வைணவக் கோவில்களில் துளசிக்கு தனி இடம் உண்டு. துளசி கலந்த நீரைத்தான் தீர்த்தமாக வழங்குகிறார்கள்.மகாலட்சுமியின் சொரூபமான துளசி, எப்போதும் திருமாலின் மார்பை அலங்கரிக்கும் சிறப்புப் பெற்றது. இதன் மூலம் மகாவிஷ்ணு எப்போதும் துளசியில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.
மூவுலகங்களிலும் எத்தனையோ மலர்கள், இலைகள் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் துளசி மட்டுமே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புடைய துளசி தோன்றியதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
மநு வம்சத்தை சேர்ந்த தர்மவத்வசன் எனும் அரசனின் மனைவி மாதவி 100 ஆண்டுகள் கர்ப்பம் தரித்து அழகான ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். ஒப்பில்லாத அழகுடன் திகழ்ந்தால் அந்த குழந்தைக்கு துளசி என்று பெயரிட்டனர். அந்த குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனவதும் நாராயணனை திருமணம் செய்ய வேண்டும் என்று தவம் செய்தாள். பிரம்மன் அவள் முன் தோன்றி, பூமியில் நீ துளசி விருட்சமாக பிறந்து கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்வாய்’ என்ற வரம் கொடுத்தார்.
அதன்படி துளசியை விஷ்ணு மணந்து வைகுண்டம் அழைத்து சென்றார். எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார்.ஒரு தடவை கண்ணன் மீது அதிக அன்பு வைத்திருப்பவர் யார் என்று சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதை உறுதிபடுத்த கண்ணன் தராசில் ஒரு பக்கம் அமர்ந்து கொள்ள, மறுபக்க தராசில் சத்தியபாமா பொன்னும் மணியுமாக குவித்தார்.
தராசு சமநிலைக்கு வரவில்லை. அடுத்து வந்த ருக்மணி, ஒரு சிறு துளசியை எடுத்த தராசு தட்டில் வைக்க, தராசு சமநிலைக்கு வந்தது. துளசியின் பெருமையை சொல்ல இந்த ஒரு புராண நிகழ்வே போதுமானதாகும்.
அன்னதானம், ரத்த தானம் உள்பட நீங்கள் எத்தனையோ தானங்கள் செய்திருப்பீர்கள். துளசியை நீங்கள் தானமாக கொடுத்து இருக்கிறீர்களா?
ஒரு தடவை துளசி இலைகளை தானமாக கொடுத்துப் பாருங்கள். அது தரும் மேன்மைக்கு நிகராக எதுவு-மே இல்லை என்பதை உணரலாம். கார்த்திகை மாதம் துளசியை தானம் செய்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியமும், பலனும் கிடைக்கும்.
எப்போது தானம் செய்தாலும், எதை தானம் செய்தாலும், அதனுடன் ஒரு துளசி இலை வைத்தே தானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துளசியின் வேரில் தேவர்களும், தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். எனவே துளசியை வீட்டில் வளர்க்கலாம்.
வீட்டு மாடத்தில் வைத்திருக்கும் துளசி செடியை தெய்வமாக கருதி சுமங்கலி பெண்கள் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். துளசி செடிக்கு தினமும் காலை, மாலை இரு நேரமும் பூஜை நடத்த வேண்டும். பொதுவாக பசுக்கள் நிறைந்த இடம், புனித நதிக்கரைகள் மற்றும் பிருந்தாவனம் ஆகிய இடங்களில் துளசி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வீட்டில் துளசியை வளர்க்கும் போது, அதற்குரிய சுத்தம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி அவதரித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கார்த்திகை பவுர் ணமி தினத்தன்று துளசி மாடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்தால் நினைத்தது நடக்கும். பெண்கள் துளசியை எந்த அளவுக்கு வழிபாடு செய்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களிடம் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
துளசி செடியின் கீழ் தேங்கி இருக்கும் தண்ணீரில் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களும் அடங்கி இருப்பதாக ஐதீகம். அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் தோஷங்கள் விலகி விடும்.துளசித் தீர்த்தத்துக்கு இருக்கும் சிறப்பை பல தடவை மகாவிஷ்ணு வெளிப்படுத்தியுள்ளார். ‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த அளவுக்கு ஆனந்தம் அடைவேன்’ என்று மகாவிஷ்ணு கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல, ஒரு தடவை துளசிக்கு மகா விஷ்ணுவே பூஜை செய்தார் என்று ஹரிவம்சத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது. விஷ்ணுவுக்கு உரிய நட்சத்திரம் திருவோணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரமாகும். எனவே தான் அதிக குளிர்ச்சியில் இருக்கும் மகாவிஷ்ணுவுக்கு வெப்பத்தைத் தரும் துளசியை பூஜைக்குரிய பொருளாக வைத்துள்ளனர்.
துளசியை எடுக்கும் போது பயப்பக்தியுடன் பறிக்க வேண்டும். அதிகாலையில் நீராடி சந்தியா வந்தனம் செய்து, எல்லாவித அனுஷ்டானங் களையும் முடித்த பிறகே துளசி இலையை பறிக்க வேண்டும். துளசியை பறிக்கும்போது, அதற்குரிய ஸ்லோகத்தை சொல்லியபடி பறிப்பது மிகவும் நல்லது. துளசி பறிக்கும் போது நான்கு இலைகளும், நடுவில் துளிரும் உள்ளதையும் சேர்த்து பறிக்க வேண்டும். துளசிச் செடியில் பழையது, புதியது என்ற நிலை எதையும் பார்க்க முடியாது. ஆகையால் நாம் பறிக்கும் ஒவ்வொரு துளசியும் பூஜைக்கு உகந்ததாகும்.
ஆனால் அசுத்தமாக இருக்கும் போது துளசிச் செடி பக்கமே போகக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, மாதப்பிறப்பு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் துளசியைப் பறிக்கக் கூடாது. உடலில் எண்ணைத்தேய்த்துக் கொண்டிருக்கும் போதும் துளசியைப் பறிக்க கூடாது. மதியம், இரவு மற்றும் சந்தியா நேரத்திலும் துளசியைப் பறிக்கக்கூடாது.
எப்போதும் தேவைக்கு ஏற்ப துளசி எடுப்பது நல்லது. விஷ்ணு பூஜை, பிரதிஷ்டை, தானம், விரதம் மற்றும் பித்ருகாரியங்களுக்கு துளசியை அவசியம் பயன்படுத்த வேண்டும். துளசி கலந்த தண்ணீரில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும். மரணத்தின் விளிம்பில் இருப்பவர்கள் துளசி தீர்த்தம் உட்கொண்டால் விஷ்ணு லோகம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.
ஹோமத்தில் துளசி குச்சிகளை போட்டு வழிபட்டால் நினைத்தது நடக்கும். துளசியின் நுனியில் பிரம்மா, அடியில் சிவபெருமான், மத்தியில் விஷ்ணு விசிக்கின்றனர். 12 ஆதித்தியர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள் மற்றும் அக்னி தேவர்கள் வாசம் செய்கின்றனர். துளசி இலை பட்ட தண்ணீர் கங்கைக்கு சமமாக கருதப்படுகிறது.
துளசியை ஒவ்வொரு துவாதசி திதி தினத்தன்றும் பிரம்மனே பூஜை செய்கிறார். அது போல மற்ற தேவர்களும் பூஜிக்கிறார்கள். எனவே யார் ஒருவர் துளசியை பூஜித்து வருகிறாரோ அவர்களது பாவம் விலகி விடும்.
துளசியில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. தினமும் 10 துளசி இலையை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். துளசி சாறுக்கு பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. துளசி தீர்த்தம் வயிற்றுக் கோளாறுகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் போக்கும். ஜீரண சக்தி மேம்படும். இதயம், கல்லீரல் சீராக செயல்படும்.
வீட்டில் துளசி வளர்ப்பதால் சுத்தமான காற்றை நாம் பெற முடியும். புகை மற்றும் மாசுவை தூய்மைப் படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு. எனவே அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் துளசி உயர்வானது. புனிதமானது. ஈடு இணையற்றது. இத்தகைய சிறப்புடைய துளசியை வைணவத் தலங்களுக்கு செல்லும் போது மறக்காமல் வாங்கிச் செல்ல வேண்டும். துளசி சார்த்தி நீங்கள் வழிபடும் போது பெருமாளின் அருளை மிக எளிதாகப் பெற முடியும்.
அது மட்டுமின்றி மகா விஷ்ணுவின் வைகுண்டத்துக்கு சென்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ வழி ஏற்படும். துளசி வழிபாடு செய்யும் இளம் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். செல்வம் சேரும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]