துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 6 அணிகளுக்கு இடையிலான மகளிர் பெயார்ப்ரேக் அழைப்பு கிரிக்கெட் (இருபது 20) சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கு முதலாவது அணியாக ஃபெல்கன்ஸ் தகுதிபெற்றது.
ஸ்பிரிட் அணிக்கு எதிராக சனிக்கிழமை (14) நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஃபெல்கன்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இலங்கை அணித் தலைவி சமரி அத்துபத்து, அவுஸ்திரேலிய வீராங்கனை டெனி வைட் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து ஃபெல்கன்ஸ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றினர்.
அத்துடன் லீக் சுற்றில் ஸ்ப்ரிட்ஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றிமூலம் ஃபெல்கன்ஸ் பதிலடிகொடுத்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஃபெல்கன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
சமரி அத்தபத்து, டெனி வைட் ஆகிய இருவரும் 90 பந்துகளில் 132 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
சமரி அத்தப்பத்து 52 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களையும் டெனி வைட் 48 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 83 ஓட்டங்களையும் குவித்தனர்.
அணித் தலைவி சுசி பேட்ஸ் 10 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் நிக்கோலா கேரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்பிரிட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது சாரா ப்றய்ஸ் 16 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டமிழந்தார்.
2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தாய்லாந்து வீராங்கனை நத்தாகன் சாந்தம், இங்கிலாந்து வீராங்கனை சொஃபியா டன்க்லி ஆகிய இருவரும் 60 ஓட்டஙகளைப் பகிர்ந்து ஸ்பிரிட்ஸ் அணிக்கு தெம்பூட்டினர்.
நத்தாகன் சாந்தம் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து களம் நுழைந்த பிஸ்மா மாறூவ் (0), அணித் தலைவி நிக்கோலா கேரி (2) ஆகிய இருவரும் வந்த வேகத்திலேயே களம் விட்டகன்றனர்.
மறுமுனையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டன்க்லி 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் அவ்வணியியன் எதிர்பார்ப்பு அற்றுப்போனது.
சொஃபி எக்லஸ்டோன் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் அஞ்சு குரங் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சமரி அத்தப்பத்து 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதேவேளை, இந்த சுற்றுப் போட்டியில் துடுப்பாட்டத்தில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்றுள்ளவர் சமரி அத்தப்பத்து ஆவார். அவர் 6 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைச்சதம் உட்பட 60.80 என்ற சராசரியுடன் 304 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார்.
2ஆம் இடத்தில் உள்ள டெனி வைட் 205 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.