மகளிர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு மேரி கோம் உட்பட 3 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வியட்னாமில் உள்ள ஹோ சி மின் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடந்த கால் இறுதிச் சுற்றுப் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், ஒருமுறை ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றவருமான இந்தியாவின் மேரி கோம், சீன தைபே வீராங்கனையான மெங்-சீ பின்னை எதிர்கொண்டார். இப்போட்டியில் மேரி கோம் வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். அரை இறுதிச் சுற்றில் அவர் ஜப்பான் வீராங்கனையான சுபாசா கோமுராவை எதிர்த்து ஆடவுள்ளார். இத்தொடரில் இதற்கு முன்பு 4 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மேரி கோம் வென்றுள்ளார்.
54 கிலோ எடைப்பிரிவில் நடந்த கால் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையான சிக்ஷா, உஸ்பெகிஸ்தானின் பெராங்கிஸ் கோஷிமோவாவை வீழ்த்தி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 60 கிலோ எடைப்பிரிவில், பிரியங்கா சவுத்திரி, இலங்கையின் துலஞ்சனி லங்காபுரயலங்கேவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். அதே நேரத்தில் 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சவீத்தி பூரா, 5-0 என்ற கணக்கில் லி கியானிடம் தோல்வியடைந்தார்.