இந்தியாவின் நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சீனா சம்பியனானது.
தென் கொரியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2 கோல்கள் பின்னிலையில் இருந்த சீனா, மாற்று வீராங்கனைகள் இருவர் போட்ட கோல்களின் உதவியுடன் 3 – 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.
இந்த வெற்றியுடன் மகளிர் ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் சீனா 9ஆவது தடவையாக சம்பியனானது.
தென் கொரியாவுடன் இதற்கு முன்னர் நடைபெற்ற 7 போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்த சீனா மிகுந்த நம்பிக்கையோடு இறுதிப் போட்டியை எதிர்கொண்டது. தென் கொரியாவும் முதல் தடவையாக சம்பியனாகும் குறிக்கோளுடன் இறுதிப் போட்டியை எதிர்கொண்டது.
போட்டி ஆரம்பித்த சில செக்கன்கள் ஆன நிலையில் சீன வீராங்கனை வூ செங்ஷு கோல் போட எடுத்த முயற்சியை தென் கொரிய கோல் காப்பாளர் கிம் ஜுங் மி இலகுவாக தடுத்தார்.
10ஆவது நிமிடத்தில் சீனாவின் மற்றொரு வீராங்கனை ஸங் ஸின் 35 யார் தூரத்திலிருந்து எடுத்த முயற்சியும் கிம்மினால் தடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தென் கொரியாவே முதாலாவது கோலை போட்டது.
போட்டியின் 27ஆவது நிமிடத்தில் சீன பெனல்டி எல்லைக்குள் பந்தை நகர்த்திச் சென்ற லீ ஜியும் மின் மிக சாமர்த்தியமாக தனது சக வீராங்கனை சோ யூ ரி என்பவருக்கு பந்தை பரிமாறினார். அவர் மிக இலகுவாக பந்தை கோலினுள் புகுத்தி தென் கொரியாவை முன்னிலையில் இட்டார். இது இந்த சுற்றுப் போட்டியில் பெறப்பட்ட 100ஆவது கோலாக பதிவானது.
3 நிமிடங்கள் கழித்து தென் கோரியா சார்பாக லிம் சியோன் ஜூ மற்றொரு கோலை பொட எடுத்த முயற்சியை சீன கோல்காப்பாளர் ஸூ யூ கடும் முயற்சி எடுத்துக்கொண்டு தடுத்து நிறுத்தினார்.
எவ்வாறாயினும் இடைவேளைக்கு முன்னர் உபாதையீடு நேரத்தில் (45.103 நி.) சீன வீராங்கனை யாவோ லிங்வெய் தனது பெனல்டி எல்லைக்குள் பந்தை கையால் தட்டியமை வீடியோ உதவி மத்தியஸ்தர் ஒத்துழைப்புடன் (வி.ஏ.ஆர்) உறுதிசெய்யப்பட்டது.
இதனை அடுத்து வழங்கப்பட்ட பெனல்டியை ஜி சோ யுன் கோலாக்க இடைவேளையின் போது தென் கொரியா 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஸியாவொ யூயி, ஸாங்க ரூய் ஆகியோரை மாற்று வீராங்கனைகளாக சீன பயிற்றுநர் ஷூய் களமிறக்கினார்.
எனினும் தென் கொரிய வீராங்கனைகள் சீனா கோல் போடுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
60ஆவது நிமிடத்தில் ஸங் லின்யான் என்பவர் 3ஆவது மாற்று வீராங்கனையாக சின பயிற்றுநரால் களம் இறக்கப்பட்டார்.
தொடர்ந்து 68ஆவது நிமிடத்தில் தென் கொரிய வீராங்கனை லீ யங் ஜூ தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து பந்தை கையால் தட்டியதால் சீனாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. அந்த பெனல்டியை டங் ஜியாலி கோலினுள் புகுத்தி சினாவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து தென் கொரிய கோல் எல்லையை ஆக்கிரமித்த சீனா 4 நிமிடங்கள் கழித்து கோல் நிலையை சமப்படுத்தியது.
பெனல்டி கோலை புகுத்திய டங் ஜியாலி, 2 தென் கொரிய பின்கள வீராங்கனைகளைக் கடந்தவாறு பந்தை நகர்த்திச் சென்று மாற்று வீராங்கனை ஸய் லின்யனுக்கு பரிமாற அவர் அதனை கோலினுள் புகுத்தி கோல் நிலையை 2 – 2 என சமப்படுத்தினார்.
போட்டியின் கடைசி கட்டத்தில் தென் கொரியாவுக்கு கோல்போடுவதற்கு கிடைத்த 2 வாய்ப்புகளும் சீன கோல்காப்பாளர் மற்றும் பின்கள வீராங்கனைகளால் தடுக்கப்பட்டன.
ஆட்டம் முழு நேரத்தைக் கடந்து உபாதையீடு நேரத்தின் 3ஆவது நிமிடத்தைத் தொட்டபோது வங் ஷன்ஷான் பரிமாறிய பந்தை மாற்று வீராங்கனை ஸியாஓ யூயி கோலாக்க, சீனா 9ஆவது தடவையாக ஆசிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]