ஏழு வயது சிறுமியின் கண் முன்னால், அவளின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவரே இக்கொலையினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. 46 வயதுடைய பெண் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார். கொல்லப்பட்ட பெண் தனது புதிய கணவருடனும் மகளுடனும் Hauts-de-France இல் வசித்து வந்ததாகவும், அவரின் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் கணவரே துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நபரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ததாகவும், குறித்த சிறுமியை உடனடியாக மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப பிரச்சனை காரணமாக இவ்வருடத்தில் இடம்பெற்ற முதல் கொலை இதுவாகும் என அறிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் 123 பெண்கள் இதே போன்ற குடும்ப பிரச்சனைகளுக்காக கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.