எம்மில் பலரும் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பிறகு ஞாபக மறதி அதிகம் ஏற்படுகிறது.
மேலும் வேறு சிலருக்கு நினைவாற்றல் திறனில் சமச்சீரின்மையும் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு நன்கு அறிமுகமாகி பழகிய நண்பர்களின் பெயர்கள் சட்டென்று நினைவுக்கு வருவதில்லை.
அதேபோல் சில காலத்திற்கு முன்பு பயன்படுத்திய சொற்கள் சட்டென்று நினைவுக்கு வருவதில்லை.
இந்நிலையில் பலரும் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளும்போது, நாம் நாமாக இல்லையோ..! என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இது நாளடைவில் சீராக வேண்டிய ஒரு விடயம். இத்தகைய சந்தேகங்கள் ஒரு மாதத்திற்கு மேலும் தொடர்ந்தால், நீங்கள் நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்பிற்கு ஆளாகி இருக்க வாய்ப்புண்டு. இதனால் மருத்துவ நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
இன்றைய வேகமான வாழ்க்கை நடைமுறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர், எம்முடைய உடலில் இயற்கையாக அமைந்திருக்கும் உயிரியல் கடிகார சுழற்சிக்கு எதிராக வேலை செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
இதன் காரணமாக அவர்கள் ஒரே தருணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டிய கட்டாய சூழல் இருக்கிறது.
இதனால் அவர்களால் ஒருமுகத் தன்மையுடன் பணியாற்றிய வேண்டிய நிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக கொரோனாத் தொற்றுப் பாதிப்பிற்கு பிறகு எம்மில் பலருக்கும் இத்தகையப் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இவை தற்காலிகமானவை தான் என்றாலும், மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகும், இந்த நிலை நீடித்தால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும்.
மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் பொழுது, அவர்கள் நினைவாற்றலை அதிகரிப்பதற்கான புதிர் விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என பரிந்துரைப்பார்கள்.
உங்களுடைய உடலில் விற்றமின் பி 12 சத்தின் அளவு குறித்த பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள்.
நாளாந்தம் உடற்பயிற்சி, கீரை உள்ளிட்ட சத்துள்ள உணவு பொருட்கள் அடங்கிய உணவு பழக்கவழக்கம் ஆகியவற்றையும் உறுதியாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவார்கள்.
இவை எல்லாவற்றையும் விட உங்களுடைய தூக்கத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள் என முதன்மையான பரிந்துரையை முன்வைப்பர்.
நீங்கள் நாளாந்தம் 7 மணி முதல் 8 மணித் தியாலம் வரை ஆரோக்கியமாக உறங்கவேண்டும்.
இவற்றை முறைப்படுத்திக் கொண்டால் நீங்கள் நினைவாற்றல் தடுமாற்ற பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட இயலும்.
டொக்டர் அனந்த கிருஷ்ணன்
தொகுப்பு அனுஷா.