மதுபானம் தயாரிக்கும் 52 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 44000 இற்கும் அதிகமான மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக இலங்கை மதுவரித் திணைக்களம் பாராளுமன்றத்தில் வழிவகைகள் பற்றிய குழுவுக்குத் தெரிவித்தது.
இவ்வாறு போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்கள் தொடர்பில் ஒரு நிறுவனத்திடம் ஏறத்தாழ 40 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டிருப்பதாகவும் மதுவரித் திணைக்களம் குழுவில் அறிவித்தது.
வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியதுடன் இதில் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தபோதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன .
மதுபானப் போத்தல்களில் போலியான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் ஒவ்வொரு போத்தலில் இருந்தும் அரசாங்கத்துக்கு 2900 ரூபா வரி இழப்பு ஏற்படுவதாக வழிவகைகள் பற்றிய குழுவில் அண்மையில் வெளிப்பட்டதுடன் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குழு வழங்கிய பணிப்புரைக்கு அமைய மதுவரித் திணைக்களத்தினால் இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விடயம் குறித்த தகவல்களை ஆராய்ந்த வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் இதுபோன்ற போலியான ஸ்டிக்கர் மோசடிகளில் ஈடுபட்டால் மதுவரி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறிப்பிட்ட மதுபான உற்பத்தி நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பரிந்துரைத்தார்.
அத்துடன் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை விற்பனை செய்யும் மதுபான விற்பனை நிலையங்களைக் கண்டறிந்து அவற்றின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும் மதுபானப் போத்தல்களில் உள்ள பாதுகாப்பு ஸ்டிக்கர்களின் உண்மைத் தன்மை இலகுவில் கண்டறியக் கூடிய வகையில் க்யூஆர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கையடக்கத் தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்துமாறும் மதுவரித் திணைக்களத்துக்கு குழு பரிந்துரைத்தது.
இதற்கமைய இந்த வருட இறுதிக்குள் பின்வரும் கூறுகளைக் கொண்ட தகவல் தொழில்நுட்ப செயலியொன்றை மதுவரித் திணைக்களம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.உற்பத்தி செயல்முறை முடிந்த உடனேயே தானாகவே வரி கணக்கிடும் திறன், ஒன்லைனில் உரிமங்களை புதுப்பிக்கும் திறன்,வரி செலுத்தத் தவறினால் உரிமங்களைத் தானாக இரத்துச் செய்யும் முறைமை, ஏனைய நிறுவனங்களுடன் ஒன்றிணைக்கக் கூடிய வகையில், தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனித்துவமான அடையாள எண்ணாகப் பயன்படுத்தக் கூடிய முறைமை அமுல்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.
மேலும் நிலுவையில் உள்ள 6 பில்லியன் ரூபா வரியை இணங்கிக் கொண்ட கொடுப்பனவு முறைக்கு அமைய ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை மதுவரிச் சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் இரத்துச் செய்யுமாறும் வழிவகைகள் பற்றிய குழு அறிவுறுத்தியது.
அத்துடன் கள் உற்பதி செய்யும் 38 நிறுவனங்களைக் கண்காணிக்கும் பொறிமுறை போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபான போத்தல்களை வாடிக்கையாளர்கள் இலகுவில் அடையாளம் காணக்கூடிய வகையில் ஒரே மாதிரியான அடையாள முறையொன்றை அறிமுகப்படுத்தல், மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தனது அலுவலகத்தில் இருந்து அனைத்து 23 மதுபான உற்பத்தி நிலையங்களையும் மேற்பார்வையிடக் கூடிய முறைமையொன்றைஏற்படுத்தல் போன்ற பரிந்துரைகளும் வழிவகைகள் பற்றிய குழுவினால் முன்வைக்கப்பட்டன.