போலி நம்பர் பிளேட் ஒட்டி மணல் ஏற்றவந்த மூன்று மணல் லாரிகள், போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருச்சி பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள உன்னியூரில் உள்ள காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி கடந்த சில நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதில், தற்போது தமிழக அரசு ஆணைப்படி ஆன்லைனில் பதிவுசெய்தவர்களுக்கு மணல் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று யூனிட் மணலுக்கு 1,620 ரூபாயும், இரண்டு யூனிட்டுக்கு 1,080 ரூபாய்க்கும் டி.டி எடுக்கவேண்டும். ”உன்னியூர் குவாரியில் மணல் ஏற்றவரும் சில லாரி உரிமையாளர்கள், ஆன்லைன் பதிவில் லாரியின் உண்மையான பதிவுஎண் மூலம் மணல் பெறுவதற்கு பதிவுசெய்கின்றனர். அதற்கு அடுத்த தினம், இருசக்கர வாகனங்கள் அல்லது ஆம்னி வேன்கள் ஆகியவற்றின் பதிவு எண்ணைக் கொண்டு மணல் பெறுவதற்கு ஆன்லைன் பதிவைச் செய்கின்றனர்” என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து லாரி உரிமையாளர் ஒருவர், “ஒரு சில லாரி உரிமையாளர்கள் டர்னிங் பாயின்ட்டில் நீண்டநாள்கள் லாரிகள் மணல் பெறுவதற்கு காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், போலிப் பதிவு எண் மூலம் ஆன்லைன் மூலம் மணல்பெற விண்ணப்பிக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஆன்லைன் பதிவின்படி 21-ம் தேதி லாரிக்கு மணல் கிடைக்கும் என்றால், லோடு ஏற்றிய அடுத்த நாளே போலிப் பதிவு எண் கொண்ட லாரிக்கும் ஆன்லைன் பதிவு முன்னுரிமை அடிப்படையில் மணல் கிடைக்கிறது. மணல் ஏற்றச் செல்லும்போது லாரியின் உண்மையான பதிவு எண்ணை பெயின்ட் மூலம் மறைத்துவிட்டுப் போலிப் பதிவு எண்களை எழுதி மணல் லோடு ஏற்றுவதற்குக் குவாரிக்குக் கொண்டுசெல்கின்றனர். இந்த முறைகேட்டினால் பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் போலி பதிவு எண்கள்… சில நேரங்களில் பைக், ஆம்னிவேன், லோடு ஆட்டோ போன்றவற்றின் பதிவு எண்களாகக்கூட உள்ளது. இதைத் தடுக்க ஆன்லைன் பதிவுக்கு விண்ணப்பிக்கும் லாரியின் பதிவு எண் உண்மையானதா என்பதைக் கண்டறியும் வகையில், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துடன் ஆன்லைன் பதிவு விபரத்தை இணைப்பதுடன், பதிவின்போதே மணலுக்குரிய கட்டணத்தையும் செலுத்துமாறு விதிமுறையைக் கொண்டுவர வேண்டும். மேலும், முறைகேட்டில் ஈடுபடும் லாரி உரிமையாளர்களுக்குப் பெரும் அபராதம் விதிப்பதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் போலீஸார் அங்கு மணல் ஏற்றவந்த மூன்று லாரிகளை நிறுத்திச் சோதனையிட்டதில் கார் பதிவு எண்களைப் போலியாக மணல் லாரிகளில் ஒட்டி மணல் ஏற்றவந்தது தெரியவந்தது.
இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் முசிறி பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் அருள்மணி கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீஸார் போலி நம்பர் பிளேட் ஒட்டிவந்த மூன்று மணல் லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், மணல் லாரி டிரைவர்கள் செவிந்திபட்டியைச் சேர்ந்த சுரேஷ், கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார், வீரபாண்டியைச் சேர்ந்த மாணிக்கம் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
”இதனால், இந்த மணல் குவாரியில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க திருச்சி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.