போர் விமானங்களின் மேம்பாட்டிற்கு 500 மில்லியன் டொலர்களை கோரும் கனேடிய இராணுவம்
CF-18 வகை போர் விமானங்களின் மேம்பாட்டிற்காக அடுத்த வருட ஆரம்பத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுமதிக்குமாறு கனேடிய இராணுவம், கனேடிய மத்திய அரசிடம் கோரவுள்ளது.
இத்தகைய மேம்பாடுகளின் மூலம் இவ்விமானங்கள் 2025ஆம் ஆண்டு வரைக்கும் சேவையில் ஈடுபடுதலை உறுதி செய்யமுடியும். மேலும் புதிய விமானங்களின் கொள்வனவுக்குப் போதிய கால அவகாசத்தையும் பெறமுடியும்.
CF-18 விமானங்களின் கட்டமைப்பின் உறுதித்தன்மையைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனேவே ஆரம்பமாகிவிட்டன.
புதிய குடிசார் விமானப் பயண விதிகளுக்கமைவாக தொடர்பாடல் சாதனங்களை மேம்படுத்தும்பொருட்டு கனேடிய இராணுவம் அவற்றை ஆராய்கிறது. CF-18 வகை விமானங்கள் நட்பு நாடுகளின் போர் விமானங்களுடன் தொடர்பாடுவதற்கும், CF-18 விமானத்தில் காணப்படும் ஆயுத வகைகளுக்கும் மேலும் மேம்பாடுகள் செய்யப்படலாம்.
1982 ஆம் ஆண்டளவில் வாங்கப்பட்ட CF-18 வகை விமானங்களை நவீனமயப்படுத்துவதற்காக 2002ஆம் ஆண்டு முதல் கனடா 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.