போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பன் அருகில் உள்ள சின்ட்ரா மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. சின்ட்ரா-காஸ்காயிஸ் இயற்கை பூங்காவில் பிடித்த தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
இதுபற்றி வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் ஏராளமான தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதல் சில மணி நேரங்கள் மலைப்பகுதிக்கு செல்ல முடியாத அளவிற்கு நெருப்பின்தாக்கம் இருந்தது. பின்னர் காற்றின் வேகம் தணிந்த நிலையில், சுமார் 700 வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தண்ணீர் பீய்ச்சியடித்து மேலும் தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மலையடிவாரங்களில் வசிக்கும் சுமார் 350 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேபோல் தீப்பிடித்த பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டில் வசித்து வந்த 47 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
போர்ச்சுக்கல் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்பட்டு பெருமளவில் சேதம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் 106 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.