போர்க்களம் என்றால் என்னவென்று அறியவோ..!
இயற்கையின் தீர்ப்புக்கு யார் அஞ்சுகிறானோ அவனே மனிதனாக வாழ முடியும். இதைவிடுத்து எல்லாம் என்னால் முடியும்; நான் நினைத்தால் அது நடக்கும் என்ற நினைப்பு மமதையின் பாற்பட்டதாகும்.
இது அழிவைத் தரும்.இயற்கை என்பதை இறைவன், கடவுள், தெய்வம் என்றெல்லாம் கூறிக் கொள்ளலாம்.
இயற்கையின் படைப்பு; அவற்றின் அமைப்புகள் மிகவும் அதிசயமானவை. கூடவே பிறப்பு இறப்பு என்ற ஒழுங்குமுறைகள்.
இவற்றை எல்லாம் பார்க்கும் போது எங்களையும் கடந்த-இந்த உலகுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது மனிதன் மனிதனாக வாழ்வதற்கு நிச்சயம் அவசியமானதாகும்.
எனினும் இறைவன் என்பது பற்றிய சிந்தனைகள் இல்லாமல் அட்டூழியங்களும் அநியாயங்களும் தலைவிரித்தாடுகின்றன.
உண்மைகளை மறைப்புச் செய்வதன் மூலம் இந்தநாட்டில் தமிழர்கள் பாதிக்கப்படவில்லை என்பதை நிஜப்படுத்துவதில் கூட ஒரு தரப்பு மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது எனில் இதைவிட அக்கிரமம் எதுவாக இருக்க முடியும்.
நடந்த அழிவுகளை-இழப்புக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதானது மனிதப் பண்பாகும்.இத்தகைய பண்புகள் மறத்தல் மன்னித்தல் என்ற உயரிய விளைவுகளைத் தரவல்லன.
இருந்தும் உண்மையை இருட்டடிப்பு செய்வதிலேயே எங்கள் ஆட்சி அமைப்புகள் நேரத்தை வீணாக்குகின்றன.ஒரு உண்மையை மறைப்பதற்காக பல பொய்களை சொல்ல வேண்டியுள்ளது.
சொன்ன பொய்களை பாதுகாக்க இன்னும் பல பொய்கள் உருவெடுக்கின்றன.
இத்தகைய நிலைமைகள் அனைத்தும் இயற்கையின் தீர்ப்பை மறந்து போவதால் ஏற்படுபவைதான். இயற்கை எப்படித் தீர்ப்பு வழங்கும் என்று நீங்கள் கேட்கலாம்.
அதற்கான ஒரு உதாரணம் தான் இன்று லண்டன் மாநகரிலும் இதர நாடுகளிலும் எழுந்துள்ள இந்து ஆலயங்களாகும்.
இலங்கையைக் கைப்பற்றிய அந்நியர்கள் அன்று இங்குள்ள இந்து ஆலயங்களை அழித்து தமது மத வழிபாட்டு நிலையங்களை அமைத்தனர்.
இதையிட்டு வருந்தியவர்கள் ஏராளம். நீதி கிடைக்காதோ என்று அவர்கள் வேதனைப்பட்டனர். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது நிலைமை எப்படியுள்ளது.
ஈழத்தமிழர்கள் லண்டனுக்கும் இதர நாடுகளுக்கும் சென்று அங்கு சைவக் கோயில்களை அமைத்துள்ளனர். லண்டன் மாநகரில் தேர் ஒடுகிறது.
தங்கள் மண்ணில் வாழை இலையில் சாப்பிட்டாலே உயிராபத்து என்றிருந்த நிலைமை மாறி இன்று லண்டனில் வாழை இலை போட்டு சாப்பாடு கொடுக்கும் அளவில் சைவ ஆலயங்கள் அங்கு எழுந்துள்ளன.
அதிலும் சைவ ஆலயங்கள் அமைந்துள்ள கட்டிடங்கள் பிரித்தானிய மக்களின் முன்னைய வழிபாட்டு ஆலயங்களாம். எப்படி இருக்கிறது இயற்கையின் தீர்ப்பு.
இதை நாம் சொல்லும் போது, ஐயா! ஏன் அதிக தூரம் செல்கிறீர்கள்; கொழும்பு கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் அந்தப் பகுதி போர்க்களமாக உள்ளதாம்.
அட! குண்டு வெடித்தால் தமிழர் பகுதியும் இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை அடையாளப்படுத்த ஒரு மிகச் சிறிய சம்பவம் அது என்று நீங்கள் சொல்வதும் கேட்கவே செய்கிறது.