போரின் இறுதி வாரங்களில் நடந்தது தனக்குத் தெரியும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதால், உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு முன்பாக அவரே முதலாவதாக சாட்சியமளிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
போரின் இறுதி இரண்டு வாரங்களிலும் நடந்தது தனக்குத் தெரியும் என்றும், அப்போது முன்னாள் இராணுவத் தளபதி, முன்னாள் அரச தலைவர், முன்னாள் பாதுகாப்புச் செயலர் உள்ளிட்ட யாரும் நாட்டில் இருக்கவில்லை என்றும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அவர் தெரிவித்ததாவது,
இறுதிப் போரின்போது நடந்த விடயங்கள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியும் என்றால், நிலைமாறு கால நீதிப் பொறிமுறையின் உண்மையைக் கண்டறியும் குழுவின் முன்பாக அவர் முதலில் சாட்சியமளிக்கவேண்டும். போரின் இறுதிக் கட்டங்களில் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள், மனிதாபிமானச் சட்டங்கள் இரு தரப்பினராலும் மீறப்பட்டதாக இரண்டு அறிக்கைகள் கூறுகின்றன. எனவே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, இறுதிப் போரில் நடந்தவை பற்றி சாட்சியமளிக்கவேண்டும் – என்றார்.
வடக்கில் வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த இராணுவத்துக்கு மேலதிக அதிகாரம் வேண்டும் என்ற இராணுவத் தளபதியின் கோரிக்கைக்கு இணங்குவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்த கருத்துத் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இராணுவத்தினருக்கு சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையிடுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்க முடியாது. மாகாணத்துக்கு வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரம் பிரயோகிக்கக் கூடியதாக இருந்திருந்தால் இந்தச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும் – என்றார்.