போரின் வடுக்களுடன் வாழும் இளைஞர், யுவதிகளுக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை
வடக்கில் போரினால் காயமடைந்து தழும்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை செய்வதற்காக அமெரிக்க மருத்துவர் குழு நவம்பர் மாதம் 7ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளது.
யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரும் மருத்துவர் குழு 3 நாட்கள் தங்கியிருந்து இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளும் என வைத்திய கலாநிதி அமுதா கோபாலன் கூறியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக இன்று மாலை யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வடமாகாணத்தில் போரினால் காயமடைந்த பெருமளவான இளைஞர், யுவதிகள் தழும்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் திருமணம், இயல்பான சமூக வாழ்க்கை போன்றன இல்லாமல் மறைந்து வாழ்கின்றனர்.
அவர்களுடைய இயல்பு வாழ்வுக்காக இந்த சிகிச்சை லயன்ஸ் கழகத்தின் மனிதாபிமான சேவைகளுடன் ஒட்டியதாக மேற்கொள்ளப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 8ம், 9ம், 10ம் திகதிகளில் யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் இந்த சிகிச்சைகள் நடைபெறும். இலவசமாக நடைபெறும் இந்த சிகிச்சைகளில் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றார்.