போரின் போது சொத்துக்களை இழந்த ஒரு தொகுதி மக்களுக்கு இழப்பீடு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த கால போரின் போது சொத்துக்களை இழந்த ஒரு தொகுதி மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளன.2009 ஆம் ஆண்டுற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கே இவ்வாறு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அரச ஊழியர்கள், பொதுமக்கள் என 338 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளன.இந்த இழப்பீடு வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்த இழப்பீடுகள் கட்டம் கட்டமாக வழக்கப்படும் எனவும் இழப்பீடுகள் குறித்து விண்ணப்பிக்காதவர்கள் பிரதேச செயலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணபிக்க முடியும் எனவும் மாவட்ட செயல தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், உதவிகள் சிறு தொகையாக இருந்தாலும், அவை மக்களைச் சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு நிலைபேறான வருமானத்தை ஈட்டக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.