இலங்கையில் போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம் என்றும் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இன்றியமையாதது என்றும் சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தில் தேர்ச்சிபெற்ற சட்டத்தரணியும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாலினம் தொடர்பான முன்னாள் ஆலோசகருமான பிரியா கோபாலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறும் போக்கிற்கு எதிரான போராட்டத்தை வலுவூட்டுதல்’ என்ற தலைப்பில் தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் ஆகிய இரு அமைப்புக்களுடனும் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 7.30 மணிக்கு நிகழ்நிலை ஊடாகக் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டு ‘மோதலுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறை’ தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் மோதலுடன் தொடர்புடைய மிகமோசமான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும். குறிப்பாக அரசின்கீழ் இயங்கிய தடுப்புமுகாம்களில் சித்திரவதைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றதாகப் பதிவாகியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த போராளிகள் அனுப்பிவைக்கப்பட்ட புனர்வாழ்வளித்தல் முகாம்களிலும் இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதுமாத்திரமன்றி தமது காணாமல்போன தமது கணவன் அல்லது சகோதரன் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் தொடர்பில் தகவல் அறிவதற்காகச்சென்ற பெண்கள் வன்புணர்விற்கும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் போரில் கணவனை இழந்த பெண்தலைமைத்துவக் குடும்பங்களைப் பொறுத்தமட்டில், அப்பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படும் சம்பவங்களும் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளன.
இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளாகவோ அல்லது இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கியவர்களாகவோ அல்லது விடுதலைப்புலிகளால் வலுகட்டாயமாக அழைத்துச்செல்லப்பட்டவர்களாகவோ இருக்கலாம். போரில் அவர்களுடைய பங்களிப்பு எவ்வாறானதாகவும் இருக்கலாம். இருப்பினும் நீதி வழங்கலின்போது அவர்கள் எதிர்கொண்ட பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும்.
பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனங்களில், இதுகுறித்து சமூகத்தின் பிரதிபலிப்புப் பற்றிய அச்சமும் ஒருவித ஒதுக்கப்பட்ட சிந்தனையும் ஆழமாக வேரூன்றியிருக்கின்றது. அதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலைக்கு முயன்ற சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
எனவே அவர்களுக்கான நீதியை மறுக்கமுடியாது. மாறாக நீதியை நிலைநாட்டுவதற்குத் தவறும்பட்சத்தில், அது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒதுக்கப்பட்ட சிந்தனையும் அச்சமும் மேலும் வலுவடைவதற்கே வழிவகுக்கும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் மோதலின்போது இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கச் சம்பவங்கள் தொடர்பில் ஆவணப்படுத்துவது அவசியமாகும். அதன்போது பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு ஏற்றவாறான சூழலை உருவாக்குவதுடன் அவர்களது உடலியல் ரீதியான பாதுகாப்பையும் உளவியல் ரீதியான ஆரோக்கியத்தையும் உறுதிசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]