அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதுடன் மே18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஸ்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
வவுனியாவில் இன்று (15) இடம்பெற்ற ரெலோ அமைப்பின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராஜாவின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“வவுனியாவில் சிங்களதேசத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்திய மகானை இன்றையதினம் நாம் நினைவு கூருகின்றோம்.
முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாரிய அல்லல்பட்டனர். மகிந்த கோட்டாபய அரசு அந்த மக்கள் மீது மோசமான வன்முறையை செய்து காட்டியது. அந்த வலிகளை இந்த மாதத்தில் நாம் நினைவுகூருகின்றோம்.
இதே காலப்பகுதியில் சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்படும் நிலை கோட்டா அரசுக்கு ஏற்ப்பட்டுள்ளது. இந்த நாட்டை கொண்டு நடாத்தும் திறமை அவர்களிடம் இருக்கவில்லை என்பது இன்று புலனாகின்றது.
சிங்கள மக்களின் அந்த செயற்பாட்டில் நாங்களும் இணைந்து கொள்கின்றோம்.
அத்துடன் இழந்துபோன தமது உறவுகளுக்காக அஞ்சலி செய்யும் வாய்ப்பினை எந்த ஒரு தடைகளும் இல்லாமல் புதிய பிரதமர் ஏற்படுத்தி தரவேண்டும். இந்த நிகழ்வில் சிங்கள மக்களும் கலந்து கொள்ள வேண்டும். போராட்ட காரர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
உயிரிழந்த எமது மக்களுக்கு அவர்களும் அஞ்சலியை செலுத்தவேண்டும்.
இதேவேளை புலிகளின் மீளுருவாக்கம் என்ற போர்வையில் இந்த போராட்டத்தினை மழுங்கடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் என்று முன்னரே சொல்லியிருந்தேன்.
தற்போது இந்துப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ள விடயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் துக்கத்தினை அனுபவித்து வரும் இந்த சூழலில் இப்படியான செய்திகள் வருவதை ஏற்கமுடியாது. இது எமது மக்களின் அஞ்சலியை தடைசெய்வதற்கான உக்தியாகவே பார்க்கின்றேன்.
அத்துடன் புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நிதானமாக தனது கருத்தை சொல்லியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. முதலமைச்சராக இருந்தவர் மக்களின் அதிக வாக்குகளை பெற்றவர் உடனடியாக அப்படியான கருத்தை ஏன் சொன்னார் என்று தெரியவில்லை அவர் நிதானமாக கருத்தை சொல்லியிருக்கலாம்.
இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து முடிவினை எடுக்கும் சந்தர்ப்பம் தொடர்பாக நாம் பரிசீலிக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.