அவசரமாக, அவசரகால நிலைமை அமுலாக்கப்பட்டுள்ளமையால், முன்னெடுக்கப்பட்டு வரும் வெகுஜனப் போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலைமை தற்போது உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், இதுகாலவரையிலும் அமைதிவழியில் போராடியவர்கள் அதனை தொடர்ந்தும் பின்பற்றவேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு ஜனநாயக நிறுவனங்களை சிதைக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்தாவது,
பொருளாதாரநெருக்கடிகள் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வெகுஜனப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இவ்வாறானதொரு சூழலில் அவசரமாக ஜனாதிபதி கோட்டாபயவினால் அவசரகால நிலைமை அமுலாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடானது உள்நோக்கம் கொண்டதாக கொள்ளவேண்டியுள்ளது.
குறிப்பாக, பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட தருணத்தில் அவசரகால நிலை அமுலாக்கப்பட்டிருப்பதானது ஜனாநாயக ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்குள் வன்முறைகளை உருவாக்கும் பேராபத்தையும் கொண்டிருக்கின்றது. ஆகவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மிககவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் எவ்வாறு வன்முறைகளுக்கும், திசைதிருப்பல்களுக்கும் இடமளிக்காது பாராட்டத்தக்க வகையில் செயற்பட்டது போன்று இன்னமும் அதீத கவனத்துடன் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதேநேரம் தற்போது 21மற்றும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டங்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளன.
ஆகவே ஜனநாயக நிறுவனங்கள் ஊடாகவே மாற்றங்களை ஏற்படுத்த முடியும். முறைமையினை மாற்ற முடியும். அந்த நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே ஜனநாயக நிறுவனங்களை முடக்குவதாலோ அல்லது சிதைப்பாதாலோ எதுவும் நிகழ்ந்து விடாது. அந்த வகையில் ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாட்டிற்கு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குந்தகம் விளைவிக்காது இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் எத்தனையோ இரத்த ஆறு ஓடியபின்னரும் இன்னமும் ஜனநாயக கட்டமைப்புக்கள் ஊடாகவே நீதியையும் தீர்வினையும் காண்பதற்கு முயற்சிக்கின்றோம். எமது நம்பிக்கையை முன்னுதாரணமாக போராட்டக்காரர்கள் கொள்ள வேண்டும் என்று கோருகின்றேன் என்றார்.