கிண்ணியா மற்றும் கருமலையூற்று பகுதிகளில் கேரளா கஞ்சா மற்றும் கஞ்சா கலந்த மதன மோதன லேகியம் போன்ற போதைப்பொருற்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (29) இருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் பெண்னொருவர் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட வேளை 10 கிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச்சேர்ந்த நஸார் சித்தி நஜீமா (34வயது) எனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கருமலையூற்று, வௌ்ளைமணல் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அதே இடத்தைச்சேர்ந்த சாவுல் ஹமீட் புஹாரி (44வயது) கஞ்சா கலந்த மதன மோதன லேகியத்தினை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபரிடமிருந்து 24 லேகியம் கைப்பற்றப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட நபரை சீனக்குடா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இச்சந்தேக நபர்கள் இருவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.