போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இலகு தவனைக் கொடுப்பனவு முறையில் செலுத்துவதற்கான திட்டத்தை துபாய் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வட்டியில்லா இலகு தவணை முறையில் அபராதங்களைச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட சில வங்கிகளின் கடனட்டைகள் மூலம் இப்போக்குவரத்து அபராதத் தொகைகளை செலுத்தலாம்.
அபராதப் பணத்தை 3, 6, 12 மாத தவணைகளில் முறையில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 24 மாத தவணை வழங்கப்படும்.
இதற்காக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் இணைவதற்கு துபாய் பொலிஸ் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இலகு தவணை கொடுப்பனவு முறையில் செலுத்தப்படுவதற்கான அபராதத் தொகை தனி நபர்களுக்கு 5,000 திர்ஹாம்களுக்கு மேற்பட்டதாகவும், நிறுவனங்களுக்கு 20,000 திர்ஹாம்களுக்கு மேற்பட்டதாகவும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கோரிக்கைகள் ஐக்கிய அரபு இராச்சிய மத்திய வங்கிக்கு அனுப்படும். கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும்.
அபராதத் தொகையை செலுத்தி முடிக்கும்வரை குறித்த வாகனத்தை விற்பனை செய்வதற்கு அல்லது வாகன உரிமையை மற்றொருவருக்கு மாற்றுவற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
இலகு தவணை கொடுப்பனவுகளை உரிய வேளையில் செலுத்தத் தவறுபவர்கள் 2 வருட காலத்துக்கு இத்திட்டத்திலிருந்து தடை செய்யப்படுவர் என் அறிவிக்கப்பட்டுள்ளது.