பொதுமக்களை தாக்குதல் அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் தொடர்பாக பொலிஸார் மீது ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் உடன் வடக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தலாம் என யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இயங்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் எஸ்.சண்முகரட்ணம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
பொது மக்களுக்கு அரணாக விளங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பொலிஸாருக்கு உண்டு. பொலிஸார் நடந்துகொள்ளும் முறையில் முறைப்பாடுகள் இருந்தால் யாழ்ப்பாண செயலகத்தில் உள்ள மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிடலாம்.
குறிப்பாக, முன்வைத்த முறைப்பாடுகள் மீது பொலிஸார் செயற்படாது இருத்தல், பொதுமக்களை தாக்குதல் அல்லது அடித்தல், துன்புறுத்தல், அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல், பக்கசார்பாக நடந்து கொள்ளல், பாரபட்சம் காட்டுதல், தடுத்து வைத்தல், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி காவலில் வைத்தல், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடல், காவலில் இருக்கும்போது துன்புறுத்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸாருக்கு எதிராக முறையிடலாம்.
பொலிஸ் வாகனம் அல்லது பொலிஸ் அலுவலர் தொடர்புபட்ட விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு, பொலிஸ் நடவடிக்கையின் போதான துப்பாக்கி பிரயோகம் விசாரணைக்கு தேவையான ஆவணங்கள், பதிவேடுகளை தேவையானபோது பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே மேற்படி விடயம் தொடர்பில் முறையிடுவதற்கும் உடன் ஆலோசிப்பதற்கும் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் மேலதிக விவரங்களுக்கு மாவட்ட செயலகத்தின் 55ஆம் இலக்க அறையிலும் 0213107722 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.