காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் தான் எந்தவேளையிலும் பொலிஸாரிடம் சரணடைய தயார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் செல்வேன் அதன் காரணமாக பொலிஸார் என்னை கைது செய்யலாம்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு சபாநாயகரின் அனுமதி தேவை என்பதால் அதனை வழங்குமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் காமினி ஏக்கநாயக்க, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
அரசுக்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில், அமைச்சரின் அனுசரணையுடன் பல பில்லியன் ரூபா திருட்டு இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் பொருட்டே இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் சரணடைய முன்வந்துள்ளதால் அவரை கைது செய்யலாம் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.