நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏற்றவகையில் அனைவரையும் உள்ளடக்கிய உள்ளகப்பொறிமுறையொன்றை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் இந்தப் பேரவையின் முன்நிலையில் வாக்குறுதியளித்து இருவருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றின் ஊடாக நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்வதற்கான நம்பத்தகுந்த செயற்திட்டம் எதனையும் அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை.
தற்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்குத் தாம் தயாரில்லை என்பதை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை. மாறாக போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமித்திருப்பதன் ஊடாக தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்படும் என்பதை மீளவலியுறுத்துகின்றது.
தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்படும் போக்கு தொடரும் வரையில் இலங்கையினால் நல்லிணக்கத்தையும் நிலைபேறான சமாதானத்தையும் ஒருபோதும் அடைந்துகொள்ளமுடியாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் கடுமையாகச் சாடியிருக்கின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனுமொரு அடிப்படையில் பரிகாரம் வழங்குவதற்காகவும் சர்வதேச ரீதியில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் வகையிலான மாற்றுத்தந்திரோபாயங்களை பேரவை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜெனிவா நேரப்படி மாலை 5.30 மணிக்கு இலங்கை தொடர்பிலான விவாதம் நடைபெற்றது.
இதன் ஆரம்பத்தில் இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டுவைத்து உரையாற்றுகையிலேயே உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
நாம் இலங்கை தொடர்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையில், அதன் பின்னர் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் தொடர்பில் எமது தற்போதைய அறிக்கையில் விசேட அவதானம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி இவ்விடயம் குறித்து பேரவை தொடர்ந்தும் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையகாலங்களில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்கான சமிக்ஞைகள் தென்படுவதுடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமையினையும் அவதானிக்கமுடிகின்றது.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் வெளியிடப்பட்டமை, அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டமை ஆகியன முக்கிய சில முன்நகர்வுகளாகும்.
அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்படக்கூடிய அடிப்படைப்பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக் கொண்டுவருவதற்கும் கடந்தகால மீறல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்றவகையில் சட்டத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் கட்டமைப்பு ரீதியில் மிகவும் ஆழமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும் இலங்கைக்கு அழைப்புவிடுக்கின்றோம்.
கடந்த வருடமும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இடையூறுகளும் பின்னடைவுகளும் அவதானிக்கப்பட்டமை மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமான உண்மை மற்றும் நீதி என்பன தொடர்ந்து மறுக்கப்படுகின்றன.
அத்தோடு விமர்சனங்களுக்கு அரசாங்கம் காண்பிக்கின்ற பிரதிபலிப்பு, மனித உரிமைகள் உள்ளடங்கலாக ஜனநாயக மற்றும் சிவில் சமூக இடைவெளியை ஒடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவாறான சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் நான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் சிவில் நிர்வாக செயற்பாடுகள் இராணுவமயமாக்கப்படும் போக்கு மேலும் அதிகரித்துவருகின்றது.
சிவில் தரப்பினரிடம் ஒப்படைக்கப்படவேண்டிய சில பொறுப்புக்கள் இராணுவ அதிகாரிகளின் கைகளில் இருப்பது குறித்தும் அவர்களில் சிலர் மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருப்பது குறித்தும் நான் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றேன்.
அரச கட்டமைப்புக்களைப் பொறுத்தமட்டில் இன, மதரீதியான தேசியவாதப்போக்கு தற்போது மிகவும் வெளிப்படையாகவே தென்பட ஆரம்பித்திருப்பதுடன், அதிகரித்துவரும் ஒடுக்குமுறை, சிறுபான்மையின சமூகங்களின் மத்தியில் எழுச்சியடைந்திருக்கும் அச்சம், நல்லிணக்கத்தின் வீழ்ச்சி என்பவற்றையும் அவதானிக்கமுடிகின்றது.
குறிப்பாக பௌத்த பாரம்பரிய சொத்து அல்லது வனப்பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட முரண்பாடுகள் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துவருவதை அவதானிக்கமுடிவதுடன், இது சிறுபான்மையினத்தவர் மத்தியில் கவலையைத் தோற்றுவித்திருக்கும் அதேவேளை புதிதாக அமைதியின்மை நிலை உருவாகுவதற்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தைத் தொடர்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளடங்கலாக நாட்டின் முக்கிய சுயாதீனக்கட்டமைப்புக்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவலையடைகின்றேன்.
அதேபோன்று நாட்டில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின்மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் நம்பிக்கை வீழ்ச்சிகண்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள், முக்கிய கட்டமைப்புக்களின் எதிர்கால சுயாதீனத்துவத்திற்கான முக்கிய சோதனையாக அமையும் என்பதுடன் அதில் அதிகாரப்பகிர்வு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டும்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏற்றவகையில் அனைவரையும் உள்ளடக்கிய உள்ளகப்பொறிமுறையொன்றை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் இந்தப் பேரவையின் முன்நிலையில் வாக்குறுதியளித்து இருவருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றின் ஊடாக நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்வதற்கான நம்பத்தகுந்த செயற்திட்டம் எதனையும் அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை.
உண்மை மற்றும் நீதியையும் தமது அன்பிற்குரியவர்களை நினைவுகூருவதற்கான அனுமதியையும் கோருகின்ற பாதிக்கப்பட்டவர்களும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் தொடர்ச்சியாகத் துன்பத்தை அனுபவித்துவருகின்றமை குறித்து நான் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றேன். அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களின் விதி என்னவென்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துமாறும் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இழப்பீட்டை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.
அதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களும் மதத்தலைவர்களும் அச்சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறும் இழப்பீட்டை வழங்குமாறும் அத்தாக்குதல்களுக்குக் காரணமானவர்களைப் பொறுப்புக்கூறச்செய்யுமாறும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.
மேலும் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களின் மீதான பொலிஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவினரின் தொடர்ச்சியான கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் குறித்து நான் தீவிர அவதானம் செலுத்தியிருக்கின்றேன்.
பொலிஸ் தடுப்புக்காவலின் கீழான மரணங்கள் மற்றும் பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் எச்சரிக்கைக்கும் கரிசனைக்கும் உரிய விடயங்களாகும். அதுமாத்திரமன்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் முறையற்ற விதத்தில் நடாத்தப்பட்டதாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் சில குற்றச்சாட்டுக்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இவையனைத்தும் அடிப்படைப் பாதுகாப்புக்கட்டமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன.
சர்வதேச சட்டங்களின் கீழான குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதிலும் நிலைமாறுகால நீதியை உறுதிசெய்வதற்கான செயற்திறன் வாய்ந்த திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதிலும் இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளமை குறித்து மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட எமது கடந்தகால அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்குத் தாம் தயாரில்லை என்பதை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை. மாறாக போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமித்திருப்பதன் ஊடாக தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்படும் என்பதை மீளவலியுறுத்துகின்றது.
இந்தக் காரணங்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனுமொரு அடிப்படையில் பரிகாரம் வழங்குவதற்காகவும் சர்வதேச ரீதியில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் வகையிலான மாற்றுத்தந்திரோபாயங்களை பேரவை முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
அதேபோன்று 46ஃ1 தீர்மானத்தின்படி பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், அவற்றைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதன்படி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள ஆதாரங்களை குற்றவியல் நீதியை அடிப்படையாகக்கொண்ட கண்ணோட்டத்தில் எமது குழு பகுப்பாய்வு செய்யும்.
அந்த நடைமுறை எதிர்வருங்காலங்களில் ஆதாரங்களைத் திரட்டுவதில் காணப்படும் இடைவெளிகளையும் முன்னுரிமை வழங்கப்படவேண்டிய விடயங்களையும் கண்டறிவதுடன் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய பொறிமுறையொன்றைக் கையாள்வதை முன்னிறுத்தியதாக அமையும்.
இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் என்னுடைய அலுவலகத்தின் ஊடாகப் பரந்த அடிப்படையிலான பணிகள் முன்னெடுக்கப்படவேண்டியிருக்கின்றது. பிறநாட்டு அல்லது உலகளாவிய தீர்ப்பாயக் கோட்பாடுகளுக்கு அமைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி நடைமுறைகளின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்தல் மற்றும் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கால அவகாசமும் போதியளவான மனித மற்றும் நிதி வளமும் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
46/1 தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணை, இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக்கூடிய முக்கிய வாய்ப்பை வழங்குகின்றது.
அதேவேளை தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்படும் போக்கு தொடரும் வரையில் இலங்கையினால் நியாயமான நல்லிணக்கத்தையும் நிலைபேறான சமாதானத்தையும் ஒருபோதும் அடைந்துகொள்ளமுடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]