அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை இந்திய அரசுக்குத் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், அந்தப் பணியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இந்தியப் பொருளாதாரம் பற்றிய தனது புரிதலையும் “Of Counsel: The Challenges of the Modi-Jaitley Economy” எனும் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் முன்வைக்கும் வாதங்கள் சிலவற்றை நாம் விமர்சனப் பார்வையோடு அணுகுவோம்.
தனிப்பாதை, ஆனால் வெற்றிப் பாதையா?
இன்று உலகின் முன்னேறிய பொருளாதாரங்களாக விளங்கும் பல நாடுகள், அவற்றின் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டு மக்களின் கல்வியறிவும் ஒரு குறிப்பிட்ட (உயர்)நிலையை அடைந்த பின்புதான் ஜனநாயக ஆட்சிமுறையைத் தழுவின. அந்த நாடுகளில் வாக்குரிமை முதலில் சொத்து வைத்திருந்தவர்களுக்கும் கல்வி பெற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டது; அடுத்து உழைக்கும் ஆண்களுக்கு அது நீட்டிக்கப்பட்டது; பெண்கள், சிறுபான்மையினர் வாக்குரிமை பெறப் பல போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. ஆக, எடுத்த எடுப்பிலேயே வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் தரப்படவில்லை.
இந்தப் போக்கைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டது சுதந்திரத்துக்குப் பின் இந்தியா தேர்ந்தெடுத்த வளர்ச்சிப் பாதை என்கிறார் அரவிந்த் சுப்ரமணியன். இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் சராசரியாக ஆண்டுக்கு ஒரு விழுக்காடு பொருளாதார வளர்ச்சிகூட அடையாத பின்தங்கிய, ஏழை நாடாக சுதந்திரம் பெற்ற இந்தியா, தனது வளர்ச்சிப் பயணத்தின் முதல் கட்டத்திலேயே ஜனநாயக ஆட்சி முறையை அமைத்து, அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கியது மாபெரும் ஜனநாயகப் புரட்சி என்று சுப்ரமணியன் ஒப்புக்கொள்கிறார். ஆனால், இந்தப் புரட்சி பொருளாதாரத்துக்குச் சாதகமாக அமையவில்லை என்று அவர் கருதுகிறார்.
பொருளாதாரக் களத்தில் என்ன நடந்தது?
அதற்கு அவர் தரும் விளக்கம்: ஏழை மக்கள் மிகுதியாக இருக்கும் நாட்டில், வளங்களை மறுபகிர்வு செய்வதற்கான அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த நிலையில்தான் இந்தியா இருந்தது. பொருளாதாரம் வளரத் தொடங்கும்போது வளங்கள் குறைவாகத்தான் இருக்கும்; ஏழைகளுக்கு மறுபகிர்வு செய்யும் அளவுக்கு அவை பெருகாது. ஆனால், வாக்களிக்கும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்குக் கல்வியும், ஆரோக்கியமும், வேலையும் தர வேண்டிய அரசியல் கட்டாயம் இருந்ததால், மறுபகிர்வு செய்வதற்கான திறன் இல்லாதபோதும் அன்றிருந்த கற்றுக்குட்டி அரசு அந்த முயற்சியை மேற்கொண்டது.
தனியார் துறை, தொழில்முனைவோர் மீது பல கட்டுப்பாடுகளை அரசு போட்டதால், பொருளாதாரம் வேகமாக வளரவில்லை; அதனால் வெகுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நிதி ஆதாரங்கள் உருவாகவில்லை. மேலும், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மானியங்கள் மூலம் வளங்களை மறுபகிர்வு செய்ய அரசு முயற்சி செய்த போதும், அதன் செயல்திறன் குறைபாட்டின் காரணமாக, அவற்றின் தாக்கம் குறைவாகத்தான் இருந்தது என்பது சுப்ரமணியனின் வாதம்.
இந்தியாவில் மறுபகிர்வின் வரலாற்றையும், அதன் இன்றைய நிலையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
1950களில் மறுபகிர்வு செய்வதற்கு நாட்டில் இருந்த மிகப்பெரிய வளம் நிலம். அதுவே மிக முக்கியமான உற்பத்திக் கருவியாகவும் இருந்தது. நில உச்சவரம்புச் சட்டங்களை இயற்றி, வரம்புக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் நிலச்சுவான்தார்களிடமிருந்து உபரி நிலத்தைக் கையகப்படுத்தி, நிலம் இல்லாத விவசாயிகளுக்கு அவற்றைக் கொடுக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டது. நிலத்தை மறுபகிர்வு செய்வதில் கடந்த எழுபதாண்டுகளில் மாநில அரசுகள் சாதித்தது என்ன என்பதைப் பார்ப்போம். வேளாண் கணக்கெடுப்பு (agriculture census) 2010-11, 2011 சாதிவாரியான சமூக-பொருளாதார கணக்கெடுப்பு (socio-economic caste census, 2011) நமக்குக் கீழ்வரும் விவரங்களைத் தருகின்றன:
· இந்தியாவில் 32 விழுக்காடு விவசாய நிலம் வெறும் 5 விழுக்காடு விவசாயிகளிடம் குவிந்துள்ளது
· ஊரகக் குடும்பங்களில் 56.4 விழுக்காடு குடும்பங்கள் நிலமற்றவை
· உபரி நிலம் வைத்திருக்கும் நிலச்சுவான்தார்களிடம் இருந்து கையகப்படுத்த வேண்டிய மொத்த நிலங்களில் வெறும் 12.9 விழுக்காடு நிலம்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது
· இந்தியாவில் விவசாயம் செய்பவர்களில் 85 விழுக்காடு மக்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளே (5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்). நாட்டின் மொத்த விளைநிலங்களில் இவர்களிடம் இருப்பது 45 விழுக்காடு நிலங்கள் மட்டும்தான்.
மேற்கு வங்காளம், கேரளா என விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மாநிலங்கள் மட்டுமே நிலங்களை மறுபகிர்வு செய்வதில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டன. நாட்டின் மக்கள்தொகையில் 68.84 விழுக்காடு மக்கள் வாழும் ஊரக இந்தியாவில் இன்றும் இதுதான் நிலையென்றால், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் நிலவுடைமை எவ்வளவு பரவலாக இருந்திருக்கும் என்பதையும், நிலச்சுவான்தார்கள் தங்களுக்கு வேலைசெய்த ஏழை விவசாயிகளின்மீது எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தியிருப்பர் என்பதையும் நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட நிலையில், மறுபகிர்வுக்கான அழுத்தம் யாரிடமிருந்து வந்தது?
இந்திய அரசியல் பொருளாதாரத்தின் தன்மையை 80களில் ஆய்வுசெய்த பிரணாப் பர்தன் எனும் பொருளாதார அறிஞர், சொத்து வைத்திருக்கும் வர்க்கத்தினர்தான் நாட்டின் வளங்களுக்கும், அரசின் மானியங்களுக்கும் போட்டிபோட்டனர் என்று குறிப்பிடுகிறார். நிலச்சுவான்தார்கள் மற்றும் பணக்கார விவசாயிகள், தொழிலதிபர்கள், கல்விபெற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என இம்மூன்று வர்க்கத்தினரின் ஆதிக்கக் கூட்டணியே அரசின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானித்தது என்கிறார் பர்தன். ஆக, படிப்பறிவற்ற கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தபோதும், 1950-1980 காலத்தில் அவர்களால் அந்தக் கருவியைக் கொண்டு நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பை மாற்றியமைக்க முடியவில்லை.
அதற்கடுத்த காலத்தில், அடித்தட்டு மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று தங்கள் சமூக -பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி ஆங்காங்கே வெற்றிபெற்றிருப்பினும், இன்றும் நாட்டின் வளங்களில் பெரும்பகுதி யாருக்குச் செல்கிறது என்பதை அட்டவணை 1, அட்டவணை 2 நமக்குத் தெரிவிக்கின்றன.
அட்டவணை 1: மானியம் அளிக்கப்படும் பொருட்களின் நுகர்வில் அரசின் வரையறையின்படி பணமுள்ளவர்கள் (70 விழுக்காடு மக்கள்), ஏழைகளின் (30 விழுக்காடு மக்கள்) பங்கு
ஆதாரம்: பொருளாதார ஆய்வறிக்கை 2015-16
ஒவ்வோர் ஆண்டும் வரவு-செலவு அறிக்கையில் நாட்டிலுள்ள பெருநிறுவனங்களுக்கும், செல்வந்தர்களுக்கும் பல வரியினங்களில் விலக்கு அளிக்கப்படும். 2005-06 முதல் 2015-16 வரை அளிக்கப்பட இந்த விலக்குகளின் அளவு, தேச மொத்த உற்பத்தியில் சராசரியாக 5 விழுக்காட்டுக்கு நிகரானது. இவற்றால் நாட்டிற்கு ஏதேனும் நன்மை விளைந்ததா எனும் கேள்விக்கான பதிலை இதுவரை எவரும் தந்ததாகத் தெரியவில்லை.