வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் திறைசேரியும்,மத்திய வங்கியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
பொருளாதாரத்தை இயக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய வங்கிக்கு பொறுப்பாக்கினால் நிதி கொள்கை வகுப்பில் இருந்து மக்களாணை நீக்கப்படும். மத்திய வங்கி சட்டமூலத்தில் நிறைவேற்றுத்துறையும்,சட்டவாக்கத்துறையும் நீக்கப்பட்டுள்ளமை மக்களாணைக்கு முரணானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதாரப் பாதிப்பு தொடர்பில் அனைவரும் உரையாற்றுகிறார்கள். ஆனால் பொருளாதார பாதிப்பை தோற்றுவித்தவர்கள் தலைமறைவாகியுள்ளார்கள்.பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அனைவரும் அரசாங்கத்தில் முன்னிலை வகிக்கிறார்கள்.
2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகவும்,2023 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஏற்றுமதி 23 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.மறுபுறம் முதல் காலாண்டில் கிடைக்கப் பெற்ற 820 பில்லியன் ரூபா தேசிய வருமானத்தில் 818 பில்லியன் ரூபா அரச முறை கடன்களுக்கான வட்டி செலுத்தப்பட்டுள்ளது.அரசாங்கத்திடம் 2 பில்லியன் ரூபா மாத்திரமே மிகுதியாகியுள்ளது.ஆகவே பாரிய நிதி நெருக்கடியில் நாடு உள்ளது.
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு திறைசேரியும்,மத்திய வங்கியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.நிதி வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் நிதி தொடர்பான அதிகாரங்களை மத்திய வங்கிக்கு முழுமையாக பொறுப்பாக்குவது முறையற்றது.
தேர்தல் விவகாரத்தில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவையும், அரச நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளில் அரச சேவைகள் ஆணைக்குழுவையும்,இலஞ்ச ஊழல் தொடர்பான பிரச்சினைகளில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவையும் சுயாதீனமாக்க முடியும்.ஆனால் நிதி விவகார கொள்கையை அரசாங்கத்தால் சுயாதீனப்படுத்த முடியுமா ?
நிதி சுயாதீனத்தன்மை பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தும் சகல விடயங்களுடன் தொடர்புப்பட்டுள்ளது.ஆகவே முழு பொருளாதாரத்தையும் இயக்கும் அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்க முடியுமா ?கடந்த காலங்களில் மத்திய வங்கியில் பல நிதி முறைகேடுகள் இடம்பெற்றன.மத்திய வங்கி மோசடியாளரான ரணிலை விரட்ட ஆணை தாருங்கள் என தற்போதைய ஆளும் தரப்பினர் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்களிடம் கோரினார்கள்.
இந்த சட்டமூலம் அவ்வாறான எதிர்ப்புகளுக்கும்,மக்களின் அபிலாசைகளுக்கும் உட்படாது.ஆகவே பொருளாதாரம்,நிதி கொள்கை தொடர்பில் தீர்மானம் எடுக்க மக்களாணையுடன் அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும்.மக்களுக்கு வழங்கி வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் வழங்கப்பட்ட பதவி காலத்துக்குள் நாட்டை நிர்வகிக்க முடியும். மக்களாணைக்கு முரணாக ஆட்சி செய்ய முடியாது.ஆகவே மாற்ற வேண்டியது சட்டத்தை அல்ல முறைகேடாக செயற்படும் ஆட்சியாளர்களை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மத்திய வங்கியின் சுயாதீனம் பற்றி பேசுகிறார்கள்.உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது என அறிந்தும் மத்திய வங்கி இருப்பில் இருந்த தங்கத்தை விற்றது இதுவா சுயாதீனம்,பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட கிரீஸ் நாட்டுடன் பிணைமுறிகள் விநியோகிக்கப்பட்டன இதுவா சுயாதீனம், மத்திய வங்கியின் முக்கிய தரப்பினர் ஊழல் மோசடியுடன் தொடர்புக் கொண்டுள்ளது காலம் காலமாக வெளிப்பட்டுள்ளது.ஆகவே அரசாங்கம் மாத்திரம் ஊழல் அல்ல,இங்கும் ஊழலே காணப்படுகிறது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக சிவப்பு பிடியாணை (எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த பிடியாணையை நீக்கி விட்டாரா ?என்பதை அறியில்லை.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.ஆகவே ஊழல் விவகாரத்தில் மத்திய வங்கியும் பொறுப்புக்கூறும் நிலையில் உள்ளது.
நுண்நிதி கடன்களை மத்திய வங்கி கண்காணித்ததா? வடக்கு மாகாணத்தில் நுண்கடன் பெற்றுக்கொண்டவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள்.கடந்த காலங்களில் பல நிதி நிறுவனங்கள் மூடப்பட்டது,வைப்பாளர்கள் தற்கொலை செய்துக் கொண்டார்கள்.மத்திய வங்கி தனது பொறுப்பை நிறைவேற்றியதா இல்லை?
உத்தேச மத்திய வங்கி சட்டமூலத்தில் இருந்து நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறை நீக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கி யாருக்கும் பொறுப்புக் கூற வேண்டிய தேவை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.நிதி தொடர்பான ஆலோசனைகளை சர்வதேச நிறுவனங்களிடம் இருந்துக் பெற்றுக்கொள்ள முடியும்.
உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்தால் நிதி தொடர்பான கொள்கைகளை வகுக்க முடியாது. முழு பொருளாதாரத்தையும் இயக்கும் அதிகாரம் மத்திய வங்கிக்கு பொறுப்பாக்கப்படும்.நிதி தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை என்றால் மக்களாணை கோருவது பயனற்றது.
ஆகவே பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் திறைசேரியும்,மத்திய வங்கியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.மத்திய வங்கியால் மாத்திரம் தனித்து செயற்பட்டு முன்னேற முடியாது என்றார்.