சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பவும், இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகலரும் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பல்வேறு காரணிகளால் நாடு என்ற ரீதியில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால் முழு நாடும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இதை மக்கள் மறக்கவில்லை. பொருளாதாரப் பாதிப்பில் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முழுமையாக பதவி விலகியது. பொருளாதார பாதிப்பு பாரிய ஆட்சி மாற்றத்தை குறுகிய காலத்துக்குள் ஏற்படுத்தியது.
அதன்படி கடந்த ஜூன் மாதத்தின் பின்னர் நெருக்கடிகளை குறைக்க சர்வதேச ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனூடாக தற்போது நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முடியுமாக உள்ளது.. இந்த விடயத்தில் அனைவரின் ஒத்துழைப்புகளும் அவசியமாகும்.
தற்போது அந்நிய செலவாணி அதிகரித்து செல்வதுடன் நாட்டின் ரூபாவின் பெறுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை பலமாக அமையும்.
இந்த உடன்படிக்கை மற்றும் புதிய முதலீடுகள் ஊடாக எமது நட்பு நாடுகளுடன் இருதரப்பு உடன்படிக்கைகளுக்கு செல்ல முடியுமாக இருக்கும்.
பொருளாதார ஸ்திரத்தன்மை மீண்டும் ஏற்படுத்தப்பட்டு வீழ்ச்சியடைந்திருந்த நிறுவனங்களை மீண்டும் முன்னேற்ற முடியுமாக அமைகின்றது.
கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியுமாக இருக்கும்.பொருளாதார பாதிப்பு அனைத்து தரப்பினருக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது.
நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அரசியல் நோக்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.