நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான செயற்திட்டம் தொடர்பில் விரைவில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமகால நிலைவரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய பிரதமர் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நிலைப்பாடுகளைப் பெற்று , செயற்திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இதன் போது நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றை வெற்றி கொள்ள எதிர்பார்த்துள்ள அரசாங்கத்தின் நீண்ட கால , குறுகிய கால இலக்கு தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்தோடு நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை கட்டுப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் , யோசனைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, குமார வெல்கம, முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் , கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத், முன்னாள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் அநுர பிரியதர்ஷன யாபா உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.