மேற்கிந்தியத்தீவுகளின் போர்ட் ஒவ் ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் ட்ரின்பாகோ 2023 பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளன.
ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் அம்பகமுவ மத்திய கல்லூரி வீரர் அயோமல் அக்கலன்க நூலிழையில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டு வெள்ளிப் பதக்கம் வென்று திருப்தி அடைந்தார்.
ஹேஸ்லி க்ரோஃபோர்ட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (09) நடைபெற்ற 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் 0.10 செக்கன்களில் அக்கலன்க தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டார்.
அப் போட்டியை 51.61 செக்கன்களில் நிறைவுசெய்த அக்கலன்க வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்தார். இந்தப் போட்டி நிகழ்ச்சியில் இது அவரது இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியாகும்.
உஸ்பெகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இப் போட்டி நிகழ்ச்சியை 51.40 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அத்துடன் அதுவே அவரது அதிசிறந்த நேரப் பெறுதியாகவும் பதிவானது.
ட்ரின்பாகோவில் இப் போட்டியை 51.51 செக்கன்களில் நிறைவுசெய்த ஜெமெய்க்கா வீரர் டெனில் ஸிடேன் அன்தனி றைட் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இங்கிலாந்து வீரர் ஒலிவர் பாக்கர் (52.36 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் திக்வெல்ல விஜித்த மத்திய கல்லூரி வீரர் நிலுபுல் பெஹசர தேனுஜ வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
நிலுபுல் பெஹசர 2.00 மீற்றர் உயரத்தை மூன்றாவது முயற்சியில் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அவரும் ட்ரினிடாட் அண்ட் டுபாகோ வீரர் ஜெய்டி ஜேம்ஸும் ஒரே உயரத்தை மூன்றாவது முயற்சியில் தாவிய போதிலும் 1.95 மீற்றர் உயரத்தை ஒரே முயற்சியில் தாவியதால் ஜெய்டி ஜேம்ஸுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
நிலபுல் பெஹசர 1.95 மீற்றர் உயரத்தை மூன்றாவது முயற்சியிலேயே தாவியிருந்தார்.
அப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஈதன் கேரி க்ளைட் (2.06 மீற்றர்) தங்கப் பதக்கதை சுவீகரித்தார்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான உயரம் பாய்தலில் நிலுபுல் பெஹசர 2.01 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் அம்பகமுவ மத்திய கல்லூரி வீராங்கனை ஷலனி ஹன்சிகா (ஒரு நிமிடம், 03.44 செக்.) 4ஆவது இடத்தைப் பெற்றார். இந் நிகழ்ச்சியில் அவரது அதிசிறந்த நேரப் பெறுதி இதுவாகும்.
அப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனைகள் இருவர் தங்கம், வெள்ளிப் பதக்கங்களையும் தென் ஆபரிக்க வீராங்கனை வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பெண்களுக்கான நீளம் பாய்தல் லும் பங்குபற்றிய ஷலனி ஹன்சிகா முனசிங்க 5.65 மீற்றர் தூரம் பாய்ந்து 8ஆம் இடத்தைப் பெற்றார்.