மதுரை மருத்துவக் கல்லூரி முதுகலை மருத்துவ மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆறாவது நாளாகத் தொடர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் போராட்டத்தை நடத்தி, அரசுக்கு உணர்த்தி வரும் மாணவர்கள் நேற்று மனிதச் சங்கிலி அமைத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அந்த வகையில், இன்று தூக்கில் தொங்குவதுபோல் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், “மருத்துவப் பணியில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனியார் மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முறைகேடாக நடந்த மருத்துவர் தேர்வை ரத்து செய்ய வேண்டும். முறைகேடாக நடத்தப்பட்ட நேர்முகக் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றனர். மேலும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் கூறினர். இந்தப் போராட்டத்தில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் வரையில் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாகச் சென்றவர்கள், நேற்று மனிதச் சங்கிலி அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தூக்கில் தொங்குவது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 250-க்கும் அதிகமான மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.